Wednesday, May 15, 2024
Home » தகவல் தொழில்நுட்ப கல்வி மூலம் நாட்டை வளமுள்ள நாடாக கட்டியெழுப்ப முடியும்

தகவல் தொழில்நுட்ப கல்வி மூலம் நாட்டை வளமுள்ள நாடாக கட்டியெழுப்ப முடியும்

விழாவில் நோர்வே நாட்டின் வதிவிட பிரதிநிதி தெரிவிப்பு

by mahesh
February 14, 2024 2:02 pm 0 comment

அக்குறணை மீஸான் தொழில் நுட்பகல்வி நிலைய திறப்பு விழா

தகவல் தொழில் நுட்ப கல்வி மூலம் நாட்டை பொருளாதார ரீதியாக வளமிக்க நாடாக கட்டியெழுப்ப முடியும் என்று நோர்வே நாட்டின் வதிவிடப்பிரதிநிதி மனோ சேகரம் தெரிவித்தார்.

10 மில்லியன் ரூபா செலவில் அக்குறணை குருகொட மீஸான் கல்வி நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஐ.டி. டெக்னோலஜி கற்கை நிலையம் திறந்து வைக்கும் வைபவம் மீஸான் குறூப் ஒப் நிறுவனத்தின் தவிசாளர் இஹ்திஸான் மீஸான் மொஹிடீன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நோர்வே நாட்டின் வதிவிடப்பிரதிநிதியும் 99 எக்ஸ் தகவல் தொழில்நுட்பத்தின் தவிசாளருமான மனோ சேகரம் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அக்குறணை பிரதேச செயலகத்தின் செயலாளர் ருவன்திகா ஹேந்நாயக, மாவனெல்ல தொழில் நுட்ப கல்லூரியின் முகாமையாளர் அப்துல் ரஹ்மான், தாருல் உலூம் மீஸானியா அரபுக் கல்லூரி அதிபர் ஏ. கலீலுர் ரஹ்மான், அதிபர் உவைஸ் மற்றும் ஊர் பிரமுகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நோர்ேவ நாட்டின் வதிவிடப்பிரதிநிதியும் 99 எக்ஸ் தகவல் தொழில் நுட்பத்தின் தவிசாளருமான மனோ சேகரம் தொடர்ந்து உரையாற்றும் போது;

எதிர்கால மாணவர் சமூகத்திற்குத் தேவையான மூன்றாம் நிலை தொழில் நுட்பக் கல்வி கற்கை நெறிகளுக்கான வழிகளை காட்டுவது மட்டுமல்ல எம்மால் இயன்றளவு அதில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக நிதி உதவிகளையும் பங்களிப்பையும் வழங்கி வைப்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த காலங்களில் அரசாங்கம்தான் மாணவர்களது கல்வி மேம்பாட்டுக்கான இலவசக் கல்வியினையும் கல்வி வழிகாட்டல்களையும் வழங்கியது எனலாம். ஆனால் சமகாலத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் சமூகத் தொண்டு நிறுவனங்களும் இலவசமாக வழங்கி வருகின்றன.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது. நம்மால் சொல்லவும் முடியாது. அதற்கு ஏற்ற வகையில் நாம் நமது பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல் செய்ய வேண்டும். இன்று செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் வேலைகளை செய்யத் தொடங்கி விட்டது. இன்று தண்ணீரை செயற்கை நுண்ணறிவினையுடைய இயந்திர மனிதன் மூலம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளுகின்ற நிலைமை காணப்படுகின்றது. எதிர்கால யுகமானது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்தான் ஆட்சி செய்யப் போகிறது.

இன்று டிஜிட்டல் முறையிலான சகல பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளும் வங்கி கொடுக்கல், வாங்கல் அத்தனை செயற்பாடுகளும் ஆரம்பித்து விட்டன. அதற்கு நாங்கள் தயாராகாமல் இருப்போமாயின் பெரும் அந்தரத்தில் விடப்பட்டவர்களாக ஆகிவிடுவோம். நவீன தொழில் நுட்பத்தோடுதான் எதிர்காலம் இருக்கப் போகிறது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நாம் வழி வகைளைத் தேடிக் கொள்ள வேண்டும். நம்மிடம் என்ன திறன்கள் இருக்கின்றன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் முதலாவது உலக வரலாறு, இலங்கை நாட்டின் வரலாற்றைப் படிக்க வேண்டும். இலங்கை வரலாற்றைப் படித்தால் கடந்த கால வருடங்களில் என்னென்ன சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அப்பொழுதுதான் கொரோனா உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே இப்படியான சம்பவங்களை வைத்து நாங்கள் எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை வரையறை செய்து செயற்பட முடியும்.

தற்போதைய எமது நாட்டின் பொருளாதார நிலை குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. இன்னும் 10 வருடங்களில் அது மாற்றம் பெற்று விடும்.

மக்களுடன் தொடர்பினைப் பேணுவதற்கு சர்வதேச மொழியான ஆங்கில மொழி அறிந்து இருக்க வேண்டும். வீட்டில் தாய் மொழியினைப் பேசினாலும் மற்றவர்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஆங்கில மொழி அவசியம். அதற்கு சேக்ஸ்பியருடைய ஆங்கில மொழி அவசியமில்லை. எமது ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மொழி அறிவு அவசியமாகும்.

வாழ்க்கையில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். வாழ்க்கையில் சவால் இருந்தால் முன்னேற முடியும். டிஜிட்டல் தொழில் நுட்பம் எவ்வாறு இருந்தாலும் நாங்கள் தைரியமாக முகம் கொடுக்க வேண்டும். நாம் முழு முயற்சிகளையும் செய்து தலைமைத்துவப் பண்புகளை பெற்றுக் கொள்ளும் முன்னர் அதனைப் பின்பற்றி அனுசரித்து நடப்பவராகவும் இருத்தல் வேண்டும். ஒற்றுமை அவசியம்.

முன்னேற்றமான ஓர் இலக்கை அடைய வேண்டும் எனில் அதற்குரிய அடிப்படை இருத்தல் வேண்டும். முழு உலகமும் ஒரு கிராமம் போன்று ஒரு கைக்குள் வந்துள்ளன. அதில் நாமும் ஓர் அங்கம் ஆகும் என்பதை நினைவில் நிறுத்தி நாம் ஒற்றுமையாக இருந்து சவாலை வெற்றி கொள்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட அக்குறணை பிரதேச செயலக செயலாளர் ருவன்திகா ஹென்நாயக உரையாற்றும் போது;

நான் கடந்த வாரம்தான் அக்குறணைப் பிரதேச செயலகத்தின் செயலாளராக கடமைப் பொறுப்பேற்றேன். முதல் கூட்டம் என்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டேன். அடுத்த நிகழ்வாக வெளியில் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

உண்மையிலே எமது பிரதேச செயலகப் பிரிவில் இப்படியான கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இப்பிரதேசத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் வெளிப்பிரதேசத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி தொடர்பில் இந்நிறுவனம் நீண்ட காலமாக பங்களிப்பு ஆற்றி வரும் நிறுவனமாகும். இன்று தொழில் நுட்ப கல்வி நிலையம் திறந்து வைத்தல் என்கின்ற பொழுது அக்கல்வி இன்று உலகத்திற்கு மிகவும் தேவையான கல்வியாகும். பிள்ளைகளை தொழில் நுட்ப அறிவின் ஊடாக வளப்படுத்துவதன் மூலம் உலகில் நல்ல தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையில் இக்கல்வி நிறுவனத்தை ஆரம்பித்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் அதிபர், ஆசிரியர் குழாத்தினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசாங்கத்தினால் நடத்தப்பட வேண்டிய சேவையினையே இந்தக் கல்வி நிறுவனம் தனிப்பட்ட ரீதியாக சமூக சேவை ரீதியில் செய்து வருகின்றன. இந்த நிறுவனத்திற்கு முதலில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அது மென்மேலும் வளர்ச்சி பெற்றுச் செல்ல வேண்டும். இந்நிறுவனம் ஒரு பல்கலைக்கழகத் தரத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஏனென்றால், இந்தப் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் இருக்கும் பட்சத்தில் பட்டதாரி மாணவர்களை உருவாக்க முடியும். இது இப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல கண்டி மாவட்டத்திற்கும் பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகின்றேன். அத்தகைய வளத்துடன் எதிர்காலத்தில் பயணிப்பதற்கு சக்தியும் தைரியமும் மிக்கதாக பயணிக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கின்றேன். பிரதேச செயலகத்தின் ஊடாக தேவையான உதவிளையும் பெற்றுத் தர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாவனெல்லை இன்சைட் தொழில் நுட்ப கல்வி நிலையத்தின் முகாமையாளர் முஜிபுர்ரஹ்மான் உரையாற்றும்போது;

இந்த தொழில் நுட்ப நிலையமானது எமது சமூகத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய ஒரு நிகழ்வினை இன்று ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் தமிழ் மொழி மூல தொழில் நுட்பத் துறை சார்ந்த கற்கை நெறிகளை வழங்குகின்ற நிறுவனங்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் மூன்றே மூன்று நிறுவனங்கள் காணப்படுகின்றன. அது இன்சைட் நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற தொழில் நுட்பக் கல்லூரியாகும்.

ஒரு கற்கை நெறியை பூர்த்தி செய்தால் அதற்கென சான்றிதழ் அவசியம். அந்தச் சான்றிதழ் உயர் கல்விக்கோ அல்லது தொழில் வாய்ப்புக்கோ பயன்படுத்த முடியாது நிலை ஏற்படும் போது அந்தக் கற்கை நெறிக்கு வழங்கப்பட்ட சான்றிதழுக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. அந்த வகையில் 1995 இல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்த போது கிராமத்திற்கு ஒரு தொழில் நுட்பம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து கிராமம் கிராமமாக தொழில் பயிற்சிகளை நிறுவினார். அதற்கு முன்னர் மாவட்ட மட்டத்தில் தொழில் நுட்பக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவை அனைத்திலும் தமிழ் மொழியில் தொழில் நுட்பப் பாடங்களைத் தொடர வேண்டும் என்றால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குச் சென்றுதான் இந்த கற்கை நெறியினை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் மொழியில் தொழில் நுட்ப கற்கை நெறியினை வழங்க எந்தவொரு கல்வி நிறுவனமும் இல்லை. எனவே இந்த நாட்டின் வரலாற்றில் மீஸான் குடும்பமும் மீஸான் தொழில் நுட்ப கற்கை நிலையமும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது. 1999 ஆம் ஆண்டு அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தொழில் நுட்ப சார்ந்த கற்கை நெறிகளை வழங்குகின்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் இருக்கின்ற மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று இருக்க வேண்டும். இல்லையேல் சான்றிதழ்களை வழங்க முடியாது.

இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று இருக்க வேண்டும். அவை இல்லா விட்டால் அந்தப் பட்டப் படிப்பில் கிடைக்கின்ற சான்றிதழுக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. அதே போன்று மொழி சார், திறன்சார் தொழில் நுட்பக் கற்கை நெறிகளைத் தொடர வேண்டுமாக இருந்தால் டிவிசி என்கின்ற அங்கீகாரத்தைப் பெற்று இருத்தல் வேண்டும். நான் 30 வருடம் இத்துறையில் இருப்பதன் காரணமாக கண் கூடாகக் கண்டு இருக்கின்றேன். அந்த வகையில் குறிப்பாக இருக்கின்ற அரபுக் கல்லூரிகளில் சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழை மீஸான் தொழில் நுட்ப கற்கை நிலையம் வழங்க இருக்கிறது. அதற்கான எமது முழுமையான ஆதரவை வழங்க இருக்கிறோம்.

தேசிய மட்டத்தில் அதிக தொழில் வாய்ப்பைப் பெறக் கூடிய துறையாக இருக்கின்ற கிரபிக் டிசைனிங், கம்பியூட்டர் ஹாட்வெயார் ரிபியாரிங் ஆகிய கற்கை நெறிகளை க. பொ. த உயர் தரத்திற்குச் சமனான சான்றிதழை வழங்குகின்ற கற்கை நெறியினை இங்கே ஆரம்பித்து இருக்கிறார்கள். பொதுவாக நாட்டில் இருக்கின்ற தொழில் கற்கை நெறியினை ஆரம்பிக்கின்ற போது எம். வி. கிவ் மட்டம் மூன்றில் இருந்துதான் ஆரம்பிக்கப்படும். இங்கு அதற்குத் தேவையான வளங்கள் பல மில்லியன் கணக்கில் செலவு செய்து பெற்றுள்ளதன் காரணமாக உடன் நான்கினுடைய தரச் சான்றிதழ் வழங்க முடியும். இது குறிப்பாக இக்கல்லூரியில் கல்வி பயிலும் உலமாக்களுக்கும் பிரதேச மாணவர்களும் கௌரவமான ஒரு தொழில் வாய்ப்பை பெறக் கூடிய ஏற்பாட்டை இந்த நிறுவனம் செய்திருக்கிறது என்பது உண்மையிலே போற்றப்பட வேண்டிய வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீஸானியாஹ் கல்வி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.ஆர்.எம். உவைஸ் தனது வரவேற்புரையில்;

முழு உலகமும் தொழில் நுட்ப டிஜிட்டல் யுகத்திற்குச் சென்று முடிவடைந்து விட்டன. தகவல் தொழில்நுட்பம் அதி வேகமாக அதிகரித்து வரும் கால ஓட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் தொழில் நுட்ப கற்கை நெறிப் பிரிவு திறந்து வைப்பதில் நாங்கள் மற்றற்ற மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையில் மிகப் பிரபல்யமான தகவல் தொழில் நுட்பத்தின் பிரதான நிபுணர் மனோ சேகரம் அவர்களின் கரத்தினால் திறந்து வைக்கப்பட்டது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எமது அக்குறணை செயலக அலுவலகத்திற்கு புதிதாக வந்துள்ள பிரதேச செயலாளர் முதன் முதலாக இந்நிகழ்வில் பங்கேற்றவர். அவருடைய சேவை அக்குறணை மக்களுக்கும் எமக்கும் கிடைக்க வேண்டும்.

அதே போன்று அக்குறணை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி விட்டு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். இந்திக குமாரி அபேசிங்கவை இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். அவர்கள் பல்வேறு விடயங்களில் எங்களுடைய கல்வி நிறுவனத்தின் மேம்பாட்டுக்கு பங்காற்றியுள்ளார்.

அக்குறணைப் பொறுத்தவரையில் அதிகளவிலான மக்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மக்கள்தான் இருக்கின்றனர். நீங்கள் எந்த யோசனைகளை முன்வைத்தாலும் நிச்சயமாக திட்டமிட்டபடி நிறைவேற்றுவதற்குப் பங்களிப்பு நல்குவார்கள். மீஸானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர் மீஸான் வபாத்தானாலும் அவர்களுடைய கல்விச் சேவையினால் அவருடைய மறுமை வாழ்வுக்கு அல்லாஹ்வினுடைய அருள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். இந்நாளில் அவருக்காகவும் பிரார்த்திப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT