Sunday, September 8, 2024
Home » நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்த முடிவு

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை திருத்த முடிவு

- 2024 சர்வதேச பகவத்கீதை மகோற்சவம் இலங்கையில்

by Prashahini
February 13, 2024 12:56 pm 0 comment

– புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வீடமைப்பு வேலைத்திட்டம்
– கல்வித் திட்டத்தில் AI பாடநெறிகள்
– மகாவலி அதிகாரசபையால் மக்களுக்கும் உரித்து காணி உறுதி
– கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய மற்றும் சிறுவர் மருத்துவமனைகள்

– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 முடிவுகள்

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் அமுலில் உள்ளது. குறித்த சட்டமூலம் பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய மேற்கொள்ளப்பட வேண்டியமையால், துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்துள்ள திருத்த முன்மொழிவுகளை குறித்த சட்டமூலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு இயலாமல் போயுள்ளது.

அதனால்,குறித்த திருத்தங்களை சமர்ப்பித்துள்ள துறைசார் நிபுணர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2.வணிகப் பெருந்தோட்ட முகாமைத்துவம்

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் போன்ற அரச பெருந்தோட்ட நிறுவனங்களிடமுள்ள பாரிய காணிகள் சட்டரீதியான பிரச்சினைகள், நிறுவன முரண்பாடுகள், மூலதனப் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் நீண்டகாலமாக பயிரிடலோ அல்லது பயன்பாடற்றவையாகக் காணப்படுவதாக 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்ட உரைகளில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான பாரிய அளவிலான குறைப்பயன்பாட்டுக் காணிகளில் ஏற்றுமதிப் பயிர்களைப் பயிரிடுதல், ஏற்றுமதிக்காக கால்நடைப் பண்ணைகளை உருவாக்கல் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் உற்பத்திக்கான ஆற்றல்வளங்களுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக உள்ளுர் தொழில்முயற்சியாளர்களை இணைத்துக் கொண்டு சமூகத்திற்கு பல்வித நன்மைகள் கிடைக்கும் வகையில் குறித்த காணிகளை பயனுள்ள வகையில் அமைச்சரவை அங்கீகாரமற்ற அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சால் பெருந்தோட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3.கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய மருத்துவமனை மற்றும் சிறுவர் மருத்துவமனையை நிறுவுதல்

கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சனத்தொகை வளர்ச்சி மற்றும் கைத்தொழில்மயப்படுத்தலுக்கு அமைவாக குறித்த மாவட்டம் பிரதான சேவை விநியோக மையமாக உள்ளது. அதனால் சுகாதார சேவைகளுக்கான கேள்வி அதிகரித்து வருவதுடன், குறித்த கேள்வியைப் பூர்த்தி செய்வதற்கு தேசிய மருத்துவமனை மற்றும் சிறுவர் மருத்துவமனையை உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் தேசிய மருத்துவமனை மற்றும் சிறுவர் மருத்துவமனையை குறித்த மாவட்டத்தில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக பியகம வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள 07 ஏக்கர்கள் 03 றூட் கொண்ட இரண்டு காணித்துண்டுகளை கையகப்படுத்தி அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கிய பின்னர் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4.செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடநெறிகளை கல்வி முறைமையில் அறிமுகப்படுத்தல்

செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடநெறிகளை கல்வி முறைமையில் அறிமுகப்படுத்தல் தொடர்பாக 2023.10.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது செயற்கை நுண்ணறிவுக்குரிய தேசிய மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய உத்தேச பாடநெறிகளை அறிமுகப்படுத்தல் பொருத்தமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த மூலோபாயத் திட்டத்தின் ஒரு கூறாக பொதுக் கல்விக்குரிய செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்காக முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக கௌரவ ஜனாதிபதி ,கல்வி அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:

• தற்போது மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச பாடவிதானங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் விதந்துரையின் அடிப்படையில் திருத்தம் செய்து தேவையான அடிப்படை மனித வளங்கள் காணப்படுகின்ற பாடசாலைகளில் 08 ஆம் தரத்திலிருந்து உத்தேச முன்னோடிக் கருத்திட்டத்தை ஆரம்பித்தல்
• மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தால் வழங்கப்படும் வசதிகளின் கீழ் முன்னோடிக் கருத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்படும் பாடசாலைகளை டிஜிட்டல்மயப்படுத்தல்.
• தகவல் மற்றும் தொழிநுட்ப பாடத்திட்டத்தை கற்பிக்கின்ற 100 ஆசிரியர்களை மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தால் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்றுவித்தல்.

5.சர்வதேச சிவில் வானூர்தி சேவைகள் சமவாயத்திற்கான (ICAO Convention) திருத்தத்திற்குரிய இணைப்புப் பத்திரத்தை அணுகுதல்

சர்வதேச சிவில் விமான சேவைகள் சமவாயத்தில் (சிக்காக்கோ சமவாயம்) இலங்கை 1948 ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், குறித்த சமவாயத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ள ஒப்பந்த அரசாக உள்ளது. ஒவ்வோர் அரசும் பறந்து கொண்டிருக்கும் குடியியல் வானூர்திகளுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் சிக்காக்கோ சமவாயத்தை திருத்தம் செய்வதற்காக 1984.05.10 அன்று இடம்பெற்ற சர்வதேச சிவில் வானூர்தி சேவைகள் அமைப்பின் 25 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த திருத்தங்கள் 1998.10.01 அன்று தொடக்கம் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிக்காக்கோ சமவாயத்திற்கான குறித்த திருத்தத்திற்குரிய இணைப்புப் பத்திரத்தை (03 ஆவது உறுப்புரைக்கு மேலதிக –Article 3 bis) இற்கு இலங்கை அணுகுதல் தொடர்பாக விதந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான்செலவுகள் சட்டத்தின் அட்டவணையில் குறித்த 03 ஆவது உறுப்புரை மேலதிகமாக உட்சேர்க்கப்பட்டு குறித்த இணைப்புப் பத்திரத்தை அணுகுவதற்கு தடைகள் இல்லையென குழுவால் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1984.05.10 ஆம் திகதி மொன்ரியல் நகரில் கையொப்பமிடப்பட்ட சர்வதேச சிவில் வானூர்தி சேவைகள் சமவாயத்திற்குரிய குறித்த இணைப்புப் பத்திரத்தை (03 ஆவது உறுப்புரைக்கு மேலதிக) இற்கு அணுகுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6.மடு வீதி தேசிய பூங்காவில் அமைந்துள்ள வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட வனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிஇடப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக இருப்பதென வெளிப்படுத்தப்பட்டமையை முடிவுறுத்தல்

மடு வீதி சரணாலயத்தில் சட்ட நிலையை அதிகரிப்பதற்கு குறித்த சரணாலயத்தை தேசிய பூங்காவாக தரமயர்த்துவதற்கு வடக்கு மாகாணத்தின் மூலோபாய சுற்றாடல் மதிப்பீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுக்கமைய, குறித்த சரணாலயத்தில் காணப்பட்ட ஒருசில குடியிருப்புக்களை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக இருப்பதென நீக்கி மற்றும் அதனை அண்டிய இடப்பரப்பில் காணப்படும் வனப் பிரதேசம் உள்ளிட்ட மடு வீதி சரணாலயம் தேசிய பூங்காவாக 2015.06.22 திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மடு வீதி பாதுகாக்கப்பட்ட வனத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்ற நீண்டகாலம் செய்கைபண்ணப்படும் வயல் காணிகளை குடியிருப்பாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள காணி இடப்பரப்பை பாதுகாக்கப்பட்ட வனமாக இருப்பதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, 56.8 ஹெக்ரெயார் இடப்பரப்பு 2023.08.08 திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனமாக இருப்பதிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனமாக இருப்பதிலிருந்து விடுவிக்கப்பட்ட காணி இடப்பரப்பு வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தால் தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைமைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

7.ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்தல் மற்றும் போக்குவரத்துத் துறையினரை மீண்டும் பயிற்றுவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் அண்மையில் ரஷ்யாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இருதரப்பினருக்கிடையே ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்வதற்காக ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதலுக்கமைவாக, இருதரப்பினருக்கிடையில் குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8.2024 சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துதல்

இந்து பக்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீமத் பகவத்கீதை தொடர்பாக சமய நிகழ்வுகள் மற்றும் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு வணக்கத்திற்குரிய மதிப்பளித்தலை வழங்குவதற்காக இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடாத்தப்படும். அண்மைய ஆண்டுகளில் குறித்த மகோற்சவம் வெளிநாடுகளில் நடாத்தப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையின் நிதியனுசரணையுடன் 2024.03.01 தொடக்கம் 2024.03.03 வரை தாமரைத் தடாக வளாகத்தில் நடாத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசரா விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9.இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனுமதி பெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் உயர்ந்தபட்சம் 10 மில்லியன் ரூபாய்கள் வரையான கடன் வசதிகளை வழங்குவதற்கும், அதற்கான வட்டிச் செலவின் ஒருபகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் ஈடு செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளும் கடன்தொகை, கடன் பெறுநரால் புலம்பெயர் தொழிலொன்றில் ஈடுபடுகின்ற காலப்பகுதியில் சட்ட ரீதியான வழிமுறைகளில் அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு நாணயத்தில் செலுத்தப்பட வேண்டியதுடன், புலம்பெயர் தொழிலை முடிவுறுத்தி நாடு திரும்பிய பின்னர் இலங்கை ரூபாய்களில் செலுத்துவதற்கு இயலுமை கிட்டும்.

அதற்கமைய, உத்தேச வீடமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

10.“கூட்டுறவு சதுக்கம்” எனும் பெயரில் கூட்டுறவு வர்த்தக நிலையமொன்றை நிர்மாணித்தல்

“கூட்டுறவு சதுக்கம்” எனும் பெயரில் கூட்டுறவு வர்த்தக நிலையமொன்றை நிர்மாணித்தல் தொடர்பாக சமர்;ப்பிக்கப்பட்டுள்ள யோசனை 2023.11.27 திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. உத்தேச வேலைத்திட்டம் தொடர்பாக விதந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தேசிய அபிவிருத்திக் குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, தேசிய அபிவிருத்திக் குழுவால் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த விதந்துரைகளின் அடிப்படையில் திரட்டு நிதியத்திற்கு செலவுச்சுமை அமையாத வகையில் விருப்புக் கோரல்களை விண்ணப்பிப்பதற்குப் பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை அடையாளங்கண்டு அரச-தனியார் மற்றும் கூட்டுறவு பங்குடமை கருத்திட்டமாக உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.காணி அனுமதிப்பத்திரம் மற்றும் காணி அளிப்புப் பத்திர உரிமதாரர்களுக்கு அரச காணிகளின் அறுதி உரித்தை வழங்குகின்ற “உரித்து வேலைத்திட்டம்” இலங்கை மகாவலி அதிகாரசபையால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கும் ஏற்புடையதாக்கிக் கொள்ளல்

காணி அனுமதிப்பத்திரம் மற்றும் காணி அளிப்புப் பத்திர உரிமதாரர்களுக்கு அரச காணிகளின் அறுதி உரித்தை வழங்குகின்ற “உரித்து வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையால் 2023.12.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுற்றுலா மற்றும் காணி அமைச்சால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வேலைத்திட்டத்திற்கு அமைய, இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கும் ஏற்புடையதாக்கி “உரித்து வேலைத்திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x