சுகாதாரத்துறையினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக முடங்கியிருந்த வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இராணுவப் படையினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் இராணுவத் தளபதி ஜெனரல் விகும் லியனகே பாதுகாப்பு படைகளின் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, தற்போது மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தளபதிகளின் முழுமையான கண்காணிப்பில் உள்ளதோடு கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள் களுபோவில, கராப்பிட்டிய, மஹ்மோதர, பேராதனை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள் மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலை, மாத்தளை, பொலன்னறுவை, மெதிரிகிரிய, ஹிகுராக்கொட , மட்டகளப்பு, தெஹியத்தகண்டிய, அம்பாந்தோட்டை, தெபரவெவ, இரத்தினபுரி, பலாங்கொடை, எஹெலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, எல்பிட்டிய, ஹோமாகம மற்றும் கேகாலை உள்ளிட்ட 48 வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை இடையூறு இன்றித் தொடர்வதற்கு சுமார் 900 இராணுவத்தினர் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அந்த வைத்தியசாலைகளின் தேவைக்கேற்ப இராணுவப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், அவசரநிலை ஏற்பட்டால், இராணுவத் தளபதி ஜெனரல் விகும் லியனகே, அங்கு நிலைநிறுத்துவதற்குத் தேவையான இராணுவத்தினரை தயார்படுத்தி, பொதுமக்களுக்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழில்சார் நடவடிக்கைகள் காரணமாக தமது அன்றாட நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு படைத் தளபதிகளுக்கு மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சமமான கொடுப்பனவு கோரி 72 சுகாதார ஊழியர் சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தம்