நாட்டு மக்கள் வழங்கியுள்ள மக்களாணையை மக்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த வகையில் பொருளாதார மீட்சி தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு பாராளுமன்றம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தினால் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த இரண்டாண்டு காலமாக நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளையும், அரசியல் ரீதியிலான நெருக்கடிகளையும் எதிர்கொண்டது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதிக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தை காட்டிலும் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கடந்த ஆண்டு இரட்டை இலக்கத்தில் காணப்பட்ட உணவு மற்றும் உணவு அல்லாத பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். சுற்றுலாத்துறை கைத்தொழில், விவசாயத்துறை உள்ளிட்ட துறைகள் முன்னேற்றமடைந்துள்ளன.
விவசாயத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் விளைச்சலை இரட்டிப்பாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேசிய விவசாயத்துறையை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.
ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வெளிப்படைத்தன்மையுடனான செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அஸ்வெசும நலன்புரித் திட்டம் வினைத்திறனான முறையில் செயற்படுத்தப்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலையிலும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் தீர்மானங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு
சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஒரு சில காரணங்களை மாத்திரம் வரையறுத்துக்கொண்டு பொருளாதார பாதிப்பை அளவிட முடியாது. பூகோள ரீதியான காரணங்கள் பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணங்களாக அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்க ஊழியர்கள் எவரையும் சேவையில் இருந்து நீக்கவில்லை. முறையான முகாமைத்துவத்துடன் அரச அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் முதல் கொடுப்பனவுகளை முழுமையாக அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளோம். அதேபோல் ஓய்வூதியம் பெறுநர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்