Home » நான்காவது மாதத்தை எட்டியது காசா போர்: தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்

நான்காவது மாதத்தை எட்டியது காசா போர்: தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்

போர் நிறுத்த முயற்சியில் பிளிங்கன்

by mahesh
February 7, 2024 8:12 am 0 comment

காசாவில் போர் வெடித்து இன்றுடன் (07) நான்கு மாதங்களை எட்டும் நிலையில் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதல்கள் தொடரும் நிலையில் பலஸ்தீனர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 27,500ஐ தாண்டி அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் வடக்கு காசாவை மையப்படுத்தி இருந்த இஸ்ரேலின் தாக்குதல்கள் தற்போது தெற்கின் மிகப்பெரிய நகரான கான்யூனிஸில் தீவிரம் அடைந்துள்ளது. எனினும் மத்திய மற்றும் வடக்கு காசாவிலும் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 107 பேர் கொல்லப்பட்டு மேலும் 143 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் கான் யூனிஸ் நகரின் நாசர் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஜூரா குடியிருப்புப் பகுதி மற்றும் வீடு ஒன்றின் மீது திங்கட்கிழமை நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

“எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை, நாம் எங்கே போவது?” என்று முஹமது கசாத் என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். காசாவின் எல்லை நகரான ரபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மகள் உட்பட தனது குடும்பத்தின் ஆறு பேர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 27,585 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 66,978 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் போர் நிறுத்த முயற்சியாக பிராந்தியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் சவூதி அரேபியாவில் அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் நேற்று (06) எகிப்தை சென்றடைந்தார்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஐந்தாவது முறையாக பிராந்தியத்திற்கு சென்றிருக்கும் பிளிங்கன் எகிப்தில் அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசியை சந்தித்த பின், இஸ்ரேல் மற்றும் கட்டாருக்கும் பயணத்தைத் தொடர்ந்தார்.

காசா மக்கள் தொகையில் தற்போது பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபாவை நோக்கி இஸ்ரேலியப் படையினர் முன்னேறத் திட்டமிட்டிருக்கும் சூழலிலேயே பிளிங்கனின் இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரியில் பாரிஸில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த வரைவுக்கு ஆதரவை பெற பிளிங்கன் முயற்சித்தபோதும் ஹமாஸ் அல்லது இஸ்ரேல் தரப்பில் இருந்து இன்னும் உறுதியான பதில்கள் கிடைக்கவில்லை.

பிராந்திய பதற்றத்தை தணிப்பது அவசியமாக உள்ளது என்று சவூதி முடிக்குரிய இளவரசரிடம் அவர் தெரிவித்ததாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிராந்தியத்தில் உள்ள ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பதோடு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

“காசாவின் நெருக்கடிக்கு நீடித்த முடிவை அடைய பிராந்திய ஒருங்கிணைப்பு” தொடர்பிலும் இருவரும் பேசியுள்ளனர்.

எனினும் தனது பதில் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல், உயர்மட்ட ஹமாஸ் அதிகாரிகளை வேரறுக்க பலஸ்தீன நிலப்பகுதியில் தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகிறது.

“ரபா என்ற ஹமாஸின் கடைசி கோட்டை வரை… நாம் இன்னும் போரிடாத இடங்களுக்கு இராணுவம் முன்னேறும்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT