Monday, May 20, 2024
Home » கொழும்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி

கொழும்பில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி

by mahesh
February 7, 2024 11:50 am 0 comment

தென்னிந்திய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொள்ளும் U1S LONG DRIVE இசை நிகழ்ச்சி இம்மாதம் 24ஆம் திகதி கொழும்பு, ஹெவலக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பில் ஆரா என்டர்பிரைசஸ் பணிப்பாளர் ராமநாதன் ஆனந்தராஜா, சதீஸ் ஜூவலரியின் உரிமையாளர் ஆர். சதாசிவம் ஆகியோரின் தலைமையில் கொழும்பு லோட்டஸ் டவர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (5) செய்தியாளர் சந்திப்பொன்று நடாத்தப்பட்டது.

இச்செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய யுவன் சங்கர் ராஜா, ‘2024 இல் இலங்கை ரசிகர்களுக்கு இசை விருந்து வழங்குவதற்கு நான் தீர்மானித்திருந்தேன். எனது சகோதரியின் மரணம் திடீரென ஏற்பட்டு எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைய நிகழ்ச்சியினை நடாத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

இசைப் பயணத்தில் ரசிகர்களே எமது அளவு கோள். அந்த வகையில் இலங்கையிலிருந்து அண்மையில் தமிழக தொலைக்காட்சியில் பாடிய இரு யுவதிகளுக்கு எதிர்காலத்தில் பாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவுள்ளேன். அவர்களது குரல் எனக்கு நன்கு பிடித்திருக்கின்றது.

இன்று நான் ஒரு இசைத் துறையாளனாக இருப்பதற்கு அண்மையில் மறைந்த எனது சகோதரி எனது கரங்களைப் பிடித்து பியானோ இசைக்க கற்றுக்கொடுத்தார். அது இன்றும் எனது மனதில் பசுமையாகவிருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் குறைந்து 32 பாடல்களை பாடத் திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்ச்சி இளம் கலைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும். அதுவே எமது எதிர்பார்ப்பாகும்.

இலங்கை தலைநகரில் நாம் நடாத்தும் முதல் இசை நிகழ்ச்சி இது. இதனையடுத்து யாழ்ப்பாணத்திலும் நடத்துவது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றும் கூறினார்.

(கொழும்பு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT