Home » தமிழகத்தில் பா.ஜ.கவை காலூன்ற வைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சி!

தமிழகத்தில் பா.ஜ.கவை காலூன்ற வைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சி!

இரு மாத காலத்தில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது தடவையாக மீண்டும் வருகிறார்!

by gayan
February 3, 2024 10:16 am 0 comment

தமிழ்நாட்டில் அதிருப்தி அரசியல்வாதிகள் பலர் பா.ஜ.கவுடன் இணைகின்றனர். ‘இந்தியா’ கூட்டணி தகர்ந்ததால், மோடியின் வெற்றிக்கான வாய்ப்புகளே அதிகம்

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு மாதகாலப் பகுதியில் 3- ஆவது முறையாக தமிழ்நாட்டுக்கு வருகை தரவிருக்கின்றார். பாரதீய ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற வைப்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகளின் ஒரு பகுதியாகவே நரேந்திர மோடியின் இவ்விஜயங்கள் கருதப்படுகின்றன.

எதிர்வரும் 18- ஆம் திகதி தமிழ்நாட்டுக்கு வருகை தரவிருக்கின்றார் பிரதமர் நரேந்திர மோடி.- இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், இரு மாதங்களில் 3- ஆவது முறையாக தமிழ்நாட்டுக்கு அவர் மீண்டும் வருகை தரவிருப்பதால் தமிழகத்திலுள்ள பா.ஜ.க ஆதரவாளர்கள் உஷாரடைந்துள்ளனர்.

தமிழ்நாடு திருப்பூர் பல்லடத்தில் நடைபெறவிருக்கும் பா.ஜ.க நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் பிரதமர் மோடி முன்னிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இணைவதற்கான ஏற்பாடுகள் துரிதமான நடைபெறுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தல் நடைபெறுகின்ற திகதி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் 2- ஆவது வாரம் முதல் மே மாதம் 2- ஆவது வாரம் வரை லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் லோக்சபா தேர்தல் பணிகளில் முழுவீச்சில் களமிறங்கி உள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 2 மாதங்களில் 3- ஆவது முறையாக எதிர்வரும் 18- ஆம் திகதி தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தரவுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 2 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் நரேந்திர மோடி அந்நிகழ்ச்சியில் உரையாற்றினார். மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கும் அந்நிகழ்ச்சியில் இரங்கல் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி 2- ஆவது முறையாக 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டார். கேலோ விளையாட்டு போட்டிகளைத் தொடக்கி வைத்துவிட்டு ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம் கோயில்களில் அவர் வழிபாடு நடத்தினார். இந்தியாவின் தென்முனை தொடங்கும் தனுஷ்கோடிக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது 3- ஆவது முறையாக எதிர்வரும் 18- ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பல்வேறு கட்டங்களாக நடத்திய ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சிகள் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் 18- ஆம் திகதி நிகழ்ச்சியின் போது அரசியல் கட்சிகளில் ஓரம்கட்டப்பட்ட அல்லது அதிருப்தியில் இருக்கும் சில சிரேஷ்ட அரசியல்வாதிகளை பா.ஜ.கவின் பக்கம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் பா.ஜ.க தரப்பு துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் 18 -ஆம் திகதி தமிழ்நாடு வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுஒருபுறமிருக்க, இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துவதற்காக எதிரணிகள் ஒன்றுசேர்ந்து உருவாக்கியுள்ள ‘இந்தியா’ என்ற கூட்டணி உடைந்து விடும் என்று தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு எதிரான கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஒரு பேட்டி தந்திருந்தார்.

அப்பேட்டியில், “இந்தியா என்ற கூட்டணியைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று முரணான நபர்கள் கூட்டணி அமைக்கும்போது தவளையும், எலியும் சேர்ந்து கூட்டணி அமைத்தது போன்றது. ஏற்கனவே மம்தா பானர்ஜி அக்கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு, கெஜ்ரிவால், நிதீஷ் குமார் உள்ளிட்டோர் வெளியேறி விட்டார்கள். சேலம் மாநாட்டில் தி.மு.க தலைவர் முதல்வர் ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெறும் என்று கூறியிருந்தார். அவர் அப்படி பேசிவிட்டு, வீட்டுக்கு போவதற்குள் அந்த கூட்டணியே சுக்குநூறாக உடைந்து வருகிறது. கடைசியில் I.N.D.I.A கூட்டணியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மட்டுமே மிஞ்சுவார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இதையேதான் சொல்லி உள்ளார்.

“வடஇந்தியாவில் நெல்லிக்காய் மூட்டை போல ‘இந்தியா’ கூட்டணி சிதறிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான காலப்பகுதியே இருப்பதால், தமிழகத்திலும் அதுபோல நடக்கும்” என்றார் அவர்.

நரேந்திர மோடியின் ஆட்சிக்கு எதிராகக் கட்டி எழுப்பப்பட்ட ‘இந்தியா’ கோட்டைக்குள் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

‘இந்தியா’ என்ற கூட்டணிக் கோட்டை நிதிஷ்குமாரின் கனவில் உருவானது என்பதுதான் உண்மை. அவர்தான் அதற்காகப் பலகட்ட முயற்சிகளை எடுத்தார். அந்த முயற்சிக்குப் பின்னால் அவருக்குப் ‘பிரதமர் கனவு’ இருந்தது.

ஆனால் பா.ஜ.கவிடம் ஒரு தனித்திறமை உள்ளது. எந்த மாநிலத்தில் எவ்வளவு பலமான கூட்டணி இருந்தாலும் அதற்குள் ஒரு ஓட்டையை உருவாக்கிவிடுவதில் பா.ஜ.க கில்லாடியாக உள்ளது. பீகாரில் ‘மகாகத்பந்தனா’ கூட்டணியைச் சிதைத்து வெற்றி பெற்றுள்ளார்கள். அதற்கு முன் மகாராஷ்டிராவில் ‘மஹாவிகாஸ் அகாடி’ கூட்டணியைத் தரைமட்டமாக தகர்த்திருக்கிறார்கள். இப்போது அதேநிலைதான் பீகாரில் உருவாகி உள்ளது. மோடியை எதிர்த்த கட்சிகள் எல்லாம் இப்போது வலு இழந்து வருகின்றன. 2024 மக்களவைத் தேர்தலுக்குள் மோடி எதிர்ப்பு என்பது இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் மிகக் கடுமையாக மோடி எதிர்ப்பை கையில் எடுத்திருந்த தி.மு.க, நிதிஷ்குமார் வெளியேறிய பிறகு அமைதியாகப் பிரச்சினையைக் கையாள ஆரம்பித்திருக்கிறது. ஒருவேளை மீண்டும் பா.ஜ.க வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், தி.மு.கவின் நிலைமை என்ன ஆகும் என்பது பற்றி இப்போது பலரும் யோசிக்கத் தொடங்கி உள்ளனர்.

தி.மு.க இந்த விடயத்தில் அனுபவம் உள்ள கட்சி. ஏறக்குறைய இந்தியாவில் உள்ள பழைமையான கட்சிகளில் ஒன்று. 1949இல் உருவான இந்தக் கட்சி மிசா, சர்காரியா கமிஷன், ராஜீவ் படுகொலை, உட்கட்சியில் பிளவு, 2ஜி ஊழல் வழக்குகள் எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. மேலும் சட்டப் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகி வெற்றி பெறுவதில் அனுபவம் உள்ள கட்சி. இந்தக் கட்சியின் இருப்பு என்பது சாதாரணமானதல்ல. பல நுட்பங்களை அறிந்த கட்சி. ஆகவே, அக்கட்சியால் நரேந்திர மோடியை எளிமையாக சமாளித்து விட முடியும் என்கிறார்கள் அரசியல் அனுபவசாலிகள்.

“கட்சியை எப்படிக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். வாழ்வதற்கான வழிமுறைகளை அதிகம் அறிந்துவைத்துள்ள கட்சி அது. பதவி வந்துவிட்டால், அதைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் அடிமட்டம் வரை இறங்குவார்கள். இது அவர்களின் கடந்த கால வரலாறு. இரண்டுமுறை ஆட்சியை இழந்தார்கள். 1996இல் கருணாநிதி முதல்வராக ஆன பிறகு என்ன செய்தார்? 1999இல் பா.ஜ.கவுடன் போய்ச் சேர்ந்தார். அதுதான் தி.மு.க.

பா.ஜ.க மதவாதக் கட்சி இல்லை என்றார் கருணாநிதி. ஆர். எஸ். எஸ் சமுதாய இயக்கம் என்றவர் கருணாநிதி. கேட்டால், குறைந்த பட்ச உத்தரவாதத்தில் அடிப்படையில் ஆதரித்தோம் என்பார்கள். இவர்கள் கூட்டணியிலிருந்த காலத்தில்தான் குஜராத் கலவரம் நடந்தது. அந்தப் பிரச்சினை மக்களவையில் எதிரொலித்தது. 2002 மே மாதம் நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் அரசுக்கு எதிராக வாக்கெடுப்புடன் கூடிய கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் வந்தபோது, தி.மு.க வாஜ்பாயையும் மோடியையும் ஆதரித்துப் பேசிய பேச்சுகள் நாடாளுமன்ற குறிப்புகளில் இன்றும் உள்ளன. அதன்பின்னர் வாஜ்பாய் அரசு காணாமல் போகப்போகிறது என்று தெரிந்த பிறகு அப்படியே வெளியே வந்து காங்கிரஸ் கட்சியுடன் 9 ஆண்டுகள் கூட்டணியிலிருந்தது தி.மு.க.

இவர்களின் கடந்த கால வரலாறு என்பது தஞ்சாவூர் பொம்மையைப் போன்றது. எப்படி கீழே போட்டாலும் எழுது உட்கார்ந்து கொள்ளும் அந்தப் பொம்மை. அதைப் போன்றதுதான் திமுக. ஆகவே, மோடி திரும்ப வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தி.மு.க என்ன செய்யும் என்பதை மக்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். ஒரு பக்கம் அரசியல் ரீதியாக மோடியை எதிர்க்கிறார்கள். இன்னொரு பக்கம் அதானியை தமிழ்நாட்டிற்குத் தொழில் தொடங்க அழைத்து வாய்ப்பு தருவது. மோடியின் பிடியிலிருந்து தப்பிக்க தி.மு.கவிடம் நிறையப் பாதுகாப்பு படகுகள் உள்ளன” என்கிறார் தமிழகத்தின் பிரபல பத்திரிகையாளர் ஒருவர்.

எஸ். சாரங்கன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT