Monday, May 20, 2024
Home » ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான ரொபர்ட் பயஸ் உண்ணாவிரத போராட்டம்!

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான ரொபர்ட் பயஸ் உண்ணாவிரத போராட்டம்!

by sachintha
February 2, 2024 12:31 pm 0 comment

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள ரொபர்ட் பயஸ் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

தாம் உட்பட சாந்தன், முருகன், ஜெயக்குமாரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிரொபட் பயஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆனபோதும் சிறை கொட்டகையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மூலமாக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு ரொபட் பயஸ் மனு அனுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

“ஆனால் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை வாழ்வில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில்தான் அடைத்தார்கள்” என அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.

“திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. மேலும் இங்கு நடைப்பயிற்சி செய்வதற்கோ நண்பர்களைப் பார்ப்பதற்கோ முடியவில்லை. சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் எனது உடல் நலத்தை சரி செய்ய நடைப்பயிற்சி செய்ய அனுமதி கேட்டும் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் எனது உடலில் பல நோய்கள் வந்துள்ளன.

கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்தபோது இரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக்கல், மூட்டுவலி இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால் கடந்த 22.1.2024 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடைப்பயிற்சி செய்ய அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.

இந்த முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ, எந்த மதிப்பும் இல்லை. அதனால்தான் சாந்தன் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நாம் இங்கேயே இறப்பது உறுதி. இதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். அகதிகள் நேரடியாக பிறநாடு செல்வதற்கு இலங்கை அரசு கடவுச்சீட்டு வழங்கிட அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்துப் போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி காலவரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்கிறேன்” என்று தன்னுடைய மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT