Monday, May 20, 2024
Home » மனிதாபிமான ரீதியில் நேசக்கரம் நீட்டும் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம்

மனிதாபிமான ரீதியில் நேசக்கரம் நீட்டும் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம்

by sachintha
February 2, 2024 10:28 am 0 comment

இனமத பேதமற்ற ரீதியில் அரவணைக்கும் EASCCA HOSPICE நிலையம் ஏறாவூரில்

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உடலாலும் உள்ளத்தாலும் வலுவிழந்த தமது கடைசி நிமிடங்களோடு போராடும் அன்பான உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டி இன்று தேசிய ரீதியில் தனக்கென பெரும் தடயத்தை உருவாக்கியிருக்கிறது கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையம் (நுயளவநசn ஊயnஉநச ஊயசந ர்ழளிiஉந).

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளில் வைத்து பராமரிக்க வசதியற்ற நோயாளர்களுக்கும் புற்றுநோயின் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்று வரும் தூரப் பிரதேச நோயாளர்களுக்கும் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையம் (EASCCA HOSPICE) உதவி புரிந்து வருகின்றது.

இந்நோயாளர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்து வைத்தியசாலைக்குச் சென்று தமக்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் தனவந்தர்கள், கொடையாளிகள், புத்திஜீவிகளின் முழுமையான பங்களிப்புடன் இயங்கி வருகிறது.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று சவுக்கடி வீதி எனும் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்நிலையம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சுமார் ஏழு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியில் அந்நிலையம் அமையப் பெற்றுள்ளது. கடந்த 13.01.2019 இல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு நான்கு வருடங்களாக இன மத வேறுபாடில்லாமல் இலங்கையர் யாவருக்குமான தேசிய வேலைத் திட்டத்தினை மையப்படுத்தி இயங்கி வருகிறது.

அந்நிலையம் வரையறுக்கப்பட்ட தேசிய கம்பனியாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை புற்றுநோயா ளர்கள் வைத்திய நிபுணர்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடனும் சுகாதார அமைச்சின் பதிவுச் சான்றிதழுடனும் இந்நிலையம் இயங்கி வருகிறது.

இதன் போசகராக ஜாமிஆ நளீமிஆ இஸ்லாமிய கலாபீடத்தின் முதல்வர் ஏ.ஸீ. அகார் முஹம்மத், ஸ்தாபக தலைவராக டொக்டர் ஏ. இக்பால் பணியாற்றுகின்றனர்.

ஐந்து சமூக நிறுவனங்களின் தலைவராக இருக்கும் எஸ்.எல்.எம். பௌஸ் பொதுச்சபையின் தவிசாளராகவும் பணிப்பாளராகவும் உள்ளார். LOD நிறுவனத்தின் தலைவர் எஸ். ஆப்துல் மஜீட் பணிப்பாளர் சபையின் தவிசாளராக உள்ளார். பணிப்பாளர் குழுமமொன்றும் புத்திஜீவிகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனை சபையொன்றும் இந்நிலையத்தினை மிகவும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றது.

இப்பராமரிப்பு நிலையத்தில் நோயாளர்கள் தனித்தனியான அறைகளில் முற்றிலும் இலவசமாக பராமரிக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவுமென விசாலமான விடுதி வசதிகள் இங்கு காணப்படுகின்றன. விசேட தேவையுடைய நோயாளர்களுக்கு தனிப்பட்ட வசதிகளுடன் கூடிய நோயாளர் பராமரிப்பு அறைகள் காணப்படுகின்றன.

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தாதியர்களின் கீழ் 24 மணிநேர பராமரிப்புச் சேவைகள் இங்குள்ள நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. நோயாளர்களை உள ரீதியாக வலுப்படுத்தவும் நம்பிக்கையூட்டவும் ஆலோசனை வழிகாட்டல்களும் இங்கு வழங்கப்படுகின்றன. அதேநேரம் நோயாளர்களுக்கு நாளாந்த வைத்திய பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன. இங்கு தங்கியிருக்கும் நோயாளர்கள் வார நாட்களில் கதிர் வீச்சு, ஊசி மருந்தேற்றல் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக அம்புலன்ஸூடன் கூடிய குளிரூட்டப்பட்ட வாகன வசதிகளும் உள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு பராமரிப்பில் உள்ள நோயாளர்களுக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள தோட்டத்தில் இயற்கை முறையில் விளையும் கனி வர்க்கம் காய்கறிகளை உணவுக்காக வழங்குகிறார்கள். இதற்காகவே 5 ஏக்கர் கொண்ட தோட்டம் மற்றும் பண்ணைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலமாகவே நோயளர்களை நேர்த்தியான முறையில் உபசரித்து வருகின்றார்கள். ஆத்தோடு இங்கு ரம்மியமான சுற்றுச் சூழலும் அழகிய பூங்கா வசதிகளும் நோயாளிகள் தங்கள் கவலைகளை மறந்து சிகிச்சை பெற உதவுகின்றது.

சிறிய உள்ளக விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும் ஏற்ற வகையில் பொழுதுபோக்கு மையங்கள் இங்கு அமையப்பெற்றுள்ளன. புற்று நோயால் பாதிக்கப்பட்டு இன்னல்படும் உறவுகளின் நலனுக்காக பொழுதுபோக்கு நிலையமொன்றும் அமையப்பெற்றுள்ளது. இப்பொழுதுபோக்கு கட்டடத்தினுள் தொலைக்காட்சி, கரம்போர்ட், டாம்போட், பெட்மிண்டன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு மையத்திற்கு வெளியில் அமைந்திருக்கும் ‘நேச்சர் கோணர்’ எனும் பொழுதுபோக்கு மையத்தில் பறவைகள், மீன்தொட்டிகள், முயல்கள் போன்றன காணப்படுகின்றன.

இலங்கையின் நாலாபுறத்திலிருந்தும் இன மத வேறுபாடின்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் இந்நிலையத்தின் மனநிறைவான பராமரிப்பு சேவையினை முற்றிலும் இலவசமாக பெற்றிருக்கிறார்கள். இலங்கையின் எப்பாகத்தைச் சேர்ந்த புற்றுநோயாளர்களுக்கும் முழுக்க முழுக்க இலவசமான சேவைகளை இந்நிலையம் வழங்கி வருகிறது.

அமைதியான இயற்கை சூழலில் நேர்த்தியான கட்டடக் கலை வடிவமைப்புடன் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய ஓர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு இ​ைணயாக காட்சியளிக்கும் இந்நிலையத்தில் charity Shop ஒன்றும் அமைந்துள்ளது. இதனால் வரும் சிறிய வருமானம் இந்நிலையத்தின் நிதியத்திற்குச் செல்கிறது. அதேபோல நீடித்து நிலைத்திருக்கும் வருமான மூலமாக sustainable donation முறையும் தற்போது அமைக்கப்பட்டு வரும் சமூக மையக் கட்டடமும் காணப்படுகின்றன. மேலும் சில தனவந்தர்கள் கொடையாளிகள் நிலையத்திலுள்ள நோயாளர்களின் ஒரு நாள் உணவுக்கான செலவை பொறுப்பெடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையத்திற்கு நன்கொடை வழங்குவதற்கும் ஒரு நாள் உணவுச் செலவை பொறுப்பெடுப்பதற்கும் யாராவது விரும்பினால் இந்நிலையத்தோடு தொடர்பை மேற்கோண்டு மனிதாபிமானப் பணிக்கு பங்களிப்பை நல்கமுடியும்.

கிழக்கு புற்ற நோயாளர் பராமரிப்பு நிலையமானது நோயாளர்களுக்கான பராமரிப்பு நிலையமாக மட்டுமல்லாமல் தாதியர் கல்லூரி மாணவர்கள், மருத்துவபீட மாணவர்கள், சமூகசேவை கற்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு தளமாகவும் திகழ்கிறது.

இர்ஷாத் இமாமுதீன்…

(கிண்ணியா தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT