Tuesday, May 14, 2024
Home » SLvAFG; ஒரே டெஸ்ட்: இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது

SLvAFG; ஒரே டெஸ்ட்: இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது

- போட்டியை இலவசமாக கண்டுகளிக்க வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
February 2, 2024 9:54 am 0 comment

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

கொழும்பு, SSC மைதானத்தில் தற்போது (02) இடம்பெற்று வரும் இப்போட்டியானது, இரு அணிகளும் முதல் முறையாகவே டெஸ்ட் போட்டி ஒன்றில் சந்திக்கும் போட்டியாகும்.

புதிய டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தனஞ்சய டி சில்வா தான் வழிநடத்தும் முதல் போட்டியில் நாணயச்சுழற்சியை மேற்கொண்டு களத்தடுப்பு தீர்மானத்தை எடுத்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் நிலையில் அதில் 3 போட்டிகளில் வெற்றியீட்டி 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.

கடைசியாக கடந்த ஜூன் மாதம் பங்களாதேஷை எதிர்கொண்ட அந்த அணி 546 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

போதிய அனுபவம் அற்ற அணி என்றபோதும் ஒருநாள் மற்றும் ரி20 கிரிக்கெட்டில் எதிரணிக்கு சவால் விடுத்து வரும் ஆப்கான் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் திருப்பம் காட்டக் கூடியதாக உள்ளது.

இலங்கை ஆடுகளங்களில் உதவக் கூடிய வலுவான சுழற்பந்து வரிசையை கொண்டிருக்கும் அந்த அணியில் திறமையான துடுப்பாட்ட வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தனஞ்சய டி சில்வாவுடன், அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன என வலுவான துடுப்பாட்ட வரிசை மற்றும் பிரபாத் ஜயசூரிய, கசுன் ராஜித என டெஸ்ட் போட்டிகளுக்கான பிரத்தியேக பந்துவீச்சு வரிசையுடன் இலங்கை அணி களமிறங்குகின்றது.

இதில் இலங்கையின் 18ஆவது டெஸ்ட் அணித் தலைவராக களமிறங்கவிருக்கும் தனஞ்சய டி சில்வா மீது அதிக அவதானம் சென்றுள்ளது.

எனினும் இந்தப் போட்டி ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

இன்று மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் போட்டியை SSC மைதானத்தில் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT