Wednesday, May 15, 2024
Home » பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

by mahesh
January 31, 2024 7:04 am 0 comment

அரச இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பாதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கான், ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் மூன்று ஆண்டு சிறை அனுபவித்து வருகிறார். எனினும் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கான் போட்டியிடுவது தடுக்கப்பட்ட பாகிஸ்தான் பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இரகசியங்கள் சட்டத்தின் கீழ் அவர் குற்றங்காணப்பட்டுள்ளார்.

இம்ரான் கானின் தஹ்ரீக்கே இன்சாப் கட்சியின் உப தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஷாஹ் மஹ்மூத் குரேஷிக்கும் சிறப்பு நீதிமன்றத்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் அனுப்பிய இரகசிய இராஜதந்திர கடித தொடர்பை கசியவிட்டது தொடர்பிலேயே இம்ரான் கான் மீது குற்றங்காணப்பட்டது.

2022 மார்ச் 27 அன்று ஒரு பேரணியில் தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்க அரசு பாகிஸ்தான் அரசுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பியதாகவும், அது வொஷிங்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து வந்ததாகவும் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து, அந்த சதி தொடர்பான கடிதம் தன்னிடம் உள்ளதாக கூட்டத்தினரை பார்த்து ஒரு கடிதத்தையும் காட்டினார்.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசுகள் இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்தன.

தொடர்ந்து 2022 ஏப்ரல் 10 அன்று கூட்டணி கட்சிகள் இம்ரான் கான் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விளைவாக அவர் பதவி இழந்தார்.

இது தொடர்பான வழக்கு கடந்த சில மாதங்களாக சிறைக்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஒரு கேலிக்கூத்து என்ற குறிப்பிட்ட இம்ரான் கானின் தஹ்ரீக்கே இன்சாப் கட்சி இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 வருட சிறை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT