Saturday, May 18, 2024
Home » திருப்பதி தேவஸ்தானத்தைப் ​போன்று முன்னேஸ்வரத்தில் வெங்கடாசலபதி ஆலயம்

திருப்பதி தேவஸ்தானத்தைப் ​போன்று முன்னேஸ்வரத்தில் வெங்கடாசலபதி ஆலயம்

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அறக்கட்டளையினரால் பூர்வாங்க ஏற்பாடுகள்

by Gayan Abeykoon
January 24, 2024 9:00 am 0 comment

ந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்தின் மூலமாக இலங்கையில் வெங்கடாசலபதி ஆலயம் நிர்மாணிக்க வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாக உள்ளதாகவும், அதற்கான இடம் தற்போது கிடைத்துள்ளதால் அதனை விரைவில் நிர்மாணிக்கவுள்ளதாகவும் இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ள திருப்பதி அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மேற்படி ஆலயம் நிர்மாணிப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு  கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த ஊடக மாநாட்டில் இந்தியாவிலிருந்து வருகை தந்த ரி.எஸ்.ரி அறக் கட்டளையின் கா.சசிகுமார், சாயி சமர்ப்பண அறக்கட்டளையின் ஜெகத் ராம்ஜி, அதன் அங்கத்தவர் பி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ரி.எஸ்.ரி அறக் கட்டளையின் கா.சசிகுமார் மேற்குறித்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “2023 இல் மலையகப் பகுதி மக்களுக்காக தீபாவளியன்று மூவாயிரம் குடும்பங்களுக்கு வேட்டி, சட்டை, புைடவைகள் போன்றவற்றை வழங்கியிருந்தோம். இந்திய_ இலங்கை நல்லெண்ணம் மேம்பட வேண்டும் என்ற அடிப்படையில் அப்பணியை நாங்கள் செய்தோம். அதேபோல் 2024 இல் பாடசாலையில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பயிற்சிப் புத்தகம், பேனா, பென்சில், பாதணிகள், சீருடை என்பன வழங்கவுள்ளோம். சுமார் ஐயாயிரம் குழந்தைகளுக்கு சாய் சமர்ப்பணம் அறக்கட்டளை மூலமாகவும், ரி.எஸ்.ரி. அறக்கட்டளை மூலமாகவும் வழங்கவுள்ளோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றார்.

“இந்த ஆண்டு முதன் முறையாக இலங்கைக்கு வந்துள்ளோம். இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்தின் மூலமாக இலங்கையில் வெங்கடாசலபதி ஆலயம் கட்ட வேண்டும் என்ற பல நாள் கனவு உள்ளது. முதலில் கொழும்பில் இடம் ஒதுக்கினார்கள். அது சரிவர நடைமுறைப்படுத்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கதிர்காமத்தில் இடம் தருவதாக சொன்னார்கள். அதுவும் சரிவரவில்லை.

இந்த 2024 ஆம் ஆண்டுஇந்தியாவிற்கும் இலங்கைக்கும் நல்லுறவு வலுப்படும் சிறப்பான ஆண்டாகும். முன்னேஸ்வரம் தேவஸ்தான சுவாமிகள் அருளால் புத்தளம் மாவட்டம், முன்னேஸ்வரம் தேவஸ்தானம் அருகிலேயே அந்த ஆலயத்திற்குச் சொந்தமான இடத்தை இந்தியாவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு அறக்கட்டளை மூலமாக வழங்க உள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானம் மூலமாக நிதியை ஒதுக்கி முன்னேஸ்வரத்தில் மிகப்பெரிய வெங்கடாசலபதி ஆலயம் நிர்மாணிப்பதற்கு திருப்பதி தேவஸ்தான கமிட்டி முடிவு செய்துள்ளது. கமிட்டியின் ஆலோசனையின் பேரில் நாங்கள் இந்த இடத்தைப் பார்வையிடுவதற்காக வந்துள்ளோம். அந்த இடத்தைப் பார்வையிட்டோம். முன்னேஸ்வரம் தேவஸ்தான அறக்கட்டளையினர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இடம் தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களினதும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்தாலும் இலங்கையில் உள்ள பெரியோர்களாலும், சான்றோர்களாலும் மிக விரைவில் முன்னேஸ்வரம் ஆலயத்தின் அருகில் பூமி பூஜை போடவுள்ளோம். மிக விரைவில் அது நடைபெறும். திருப்பதியில் வழிபாடு நடத்துவதற்கு இலங்கையில் இருந்து நிறையப் பேர் வருகின்றனர். அவர்களில் வசதி படைத்தவர்கள் உள்ளனர். ஆனால் வசதியில்லாதவர்கள் வரமுடியாத சூழ்நிலை இருப்பதால், அவர்கள் இங்கேயே வழிபாடு செய்ய வழியேற்படும். முன்னேஸ்வரத்தில் ஆலயத்தை அமைத்து அங்கே இருக்கக்கூடிய வசதிகளை இங்கேயும் ஏற்படுத்த முடியும். அந்த நல்ல எண்ணத்தில் நாங்கள் வந்தோம்” எனவும் திருப்பதி ரி.எஸ்.ரி அறக்கட்டளையைச் சேர்ந்த கா.சசிகுமார் மேலும் தெரிவித்தார்.

“இலங்கையில் மலையகப் பகுதி மாணவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டும். அவர்கள் கல்வியில் மிகவும் பாதிப்புற்று இருக்கின்றார்கள். எனவே அவர்களின் கல்வியை மேம்படுத்துவது எமது அறக்கட்டளையின் நோக்கமாக உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு தினகரன் நிருபர்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT