Monday, May 13, 2024
Home » 91 வீதமான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசிகள்

91 வீதமான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசிகள்

சுகாதாரத்துறையை வலுப்படுத்த இவ்வாண்டில் திட்டம்

by gayan
January 23, 2024 6:10 am 0 comment

நாட்டில் 91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

தட்டம்மை நோய், இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதால், இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்

தெரிவிக்கும்போதே, கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண,

“நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே இந்த ஆண்டின் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஆரம்ப சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு மிகவும் தரமான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அவசியமான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றா நோய்கள் தொடர்பில் இலங்கை பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. 20% இற்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகளவில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ள நாடாகவும் இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களில் இதயநோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்கள் அடங்குகின்றன. மேலும், வேகமாக முதுமையடையும் மக்கள்தொகை கொண்ட நாடென்ற வகையில், நினைவாற்றல் குறைபாடு, கண் நோய்கள், எலும்பு நோய்கள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, தொற்றாத நோய்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த விசேட அவதானத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் ஆதரவு கிடைத்துள்ள போதிலும், இது தொடர்பாக பொதுமக்களின் ஆதரவு இப்பொழுதுள்ளதை விடவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது அதிகரித்து வரும் தட்டம்மை நோயைத் தடுக்க பல்வேறு விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த சில வாரங்களில், 91% குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை ஏற்ற முடிந்தது.

அத்துடன், தற்போதுள்ள மருந்துப் பற்றாக்குறையை போக்குவதற்கு பெருமளவிலான அத்தியாவசிய மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில், மருத்துவ விநியோகத் துறையையும், கொள்முதல் செயல்முறையையும் வெளிப்படையானதாக மாற்ற ஒன்லைன் முறையைப் பயன்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக ஏற்கனவே மொரட்டுவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் கணனி துறைகளுடன் சுகாதார அமைச்சு கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT