Friday, May 3, 2024
Home » அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா

by Prashahini
January 21, 2024 9:02 pm 0 comment

மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழா தேசிய ரீதியில் மட்டுமல்ல உலக வாழ் தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிகழ்வுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, அமைச்சுகளின் செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஸ், சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா டட்டா ஆகியோரும் பங்கேற்று மக்களை மகிழ்வித்தனர்.

1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, கோலப்போட்டி, சிலம்பாட்டம், தப்பாட்டம் என பல கலை, கலாசார அம்சங்களுடன் விழா நடைபெற்றது.

மலையக வரலாற்றில் இம்முறையே 1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய பொங்கல் விழா நடத்தப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கவைப்பதற்கான நகர்வுகளில் மற்றுமொரு அங்கமாக தேசிய பொங்கல் விழா பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT