நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இந்திய கைத்தொழில் குழு (CII) மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து நேற்றுமுன்தினம் (16) சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்திருந்த வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பரந்த பொருளாதார நோக்கு குறித்து விளக்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விநியோகத்திற்கான தடைகளுக்கு வெற்றிகரமாக தீர்வு வழங்கல், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் அந்நிய செலாவணி பணப்புழக்கத்தை சீராக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் மூலம் சவால்களை குறுகிய காலத்தில் சமாளிக்க முடிந்தது என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கை தனது வர்த்தக உடன்படிக்கைகளை தீவிரமாக விஸ்தரித்து வருவதாகவும், அதற்கமைவாக இலங்கை அண்மையில் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், தாய்லாந்துடன் பெப்ரவரி மாதம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
மேலும், சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்காக இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதன் ஊடாக உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைப்புக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் அரச நிறுவனங்களில் தனியார் முதலீட்டை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொலைத்தொடர்பு, நிதிச் சேவைகள் மற்றும் எரிசக்தி போன்ற இலங்கையின் முக்கிய துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
கடற்கரையை அண்டியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி குறித்து கவனம் செலுத்தி புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு இந்தியாவுடன் ஒத்துழைப்பதன் மூலம் நிலையான ஆற்றல் தீர்வுகளில் இலங்கை கவனம் செலுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அதிக திறன் கொண்ட இருதரப்பு மின்சார இணைப்பை ஏற்படுத்துவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தியாவுடனான பண்டங்கள் மற்றும் சேவைகள், சுங்க ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக வசதிக்கான திட்டங்களை முன்வைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கல்வி, கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் சுற்றுலா மற்றும் சமூக உறவுகளை மேம்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான இந்த வட்டமேசை கலந்துரையாடலில் , விநியோகச் சங்கிலித் திறனை மேம்படுத்துதல், சுகாதாரம், நுகர்வுப் பொருட்கள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பசுமை ஆற்றல் போன்ற துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையானது பல்வேறு முதலீடுகளுக்கு சிறந்த இடமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முக்கிய வாய்ப்புகள் உள்ளதோடு, உட்கட்டமைப்பு வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்புடன் செயற்படும் திறன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காலநிலை செழுமைத் திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்