ஜப்பான் நிதி அமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சருமான சுசுகி ஷுனிச்சி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ( 11) இலங்கை வந்தடைந்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஜப்பானின் நிதி அமைச்சரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் உத்தியோகபூர்வமாக வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, ஜப்பானிய அமைச்சருக்கும் இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கும் இடையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள விசேட அதிதிகள் அறையில் இருதரப்புச் சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜப்பானிய அமைச்சர் சுனிச்சிக்கு அமைச்சர் தென்னகோன் நன்றி தெரிவித்தார். அதேபோன்று, ஜப்பானுக்கு இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜப்பானிய அமைச்சர் இராஜாங்க அமைச்சர் தென்னகோனிடம் நன்றி தெரிவித்தார். ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியுள்ள ஜப்பானிய நிதியமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பல்வேறு இராஜதந்திர அதிகாரிகளுடன் உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
(ஸாதிக் ஷிஹான்)