சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்தோடு மழையானது தொடர்ச்சியாக பெய்துவருவதனால் மட்டக்களப்பு புகையிரத நிலையமும் வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுகின்றது.
தற்போதைய நிலையில் ரயில் பயணங்கள் இடம்பெற்றாலும், குறித்த பகுதியில் வெள்ள நீர் அதிகரிக்குமாயின் ரயில் போக்குவரத்தினை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்ததுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
கிரான் புலி பாய்ந்தகல் மற்றும் கின்னயடி பிரம்படித்தீவு, ஈரலகுளம், மயிலவட்டுவான், வாகரை கல்லரிப்பு பகுதிகளுக்குச் செல்லும் பாதை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் படகு சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில், மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 2319 குடும்பங்பகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்