எக்ஸ்ரே போலரிமீட்டர் செய்மதியை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியமையானது இந்தியாவின் விண்வெளி ஆற்றலின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு அதனை மேலும் அதிகரிக்கவும் அது வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இச்செய்மதியை வெற்றிகரமாக செலுத்தியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் (இஸ்ரோ) அங்கு பணியாற்றும் விஞ்ஞானிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
இஸ்ரோ நிறுவனம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி58 எக்ஸ்ரே போலரிமீட்டர் செய்மதியை புத்தாண்டின் ஆரம்பத்தில் விண்ணில் செலுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து விடுத்துள்ள ட்வீட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இச்செய்மதி வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பது விண்வெளித் துறைக்கே அற்புதமான செய்தி. இது இந்தியாவின் விண்வெளி ஆற்றலை மேலும் மேம்படுத்தும். இந்தியாவை விண்வெளித் துறையின் வளர்ச்சியினது உச்சத்திற்கு கொண்டு செல்லும் எங்கள் விஞ்ஞானிகளுக்கு நல்வாழ்த்துகள்’ என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள செய்தியில், ‘இச்செய்மதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது விண்வெளியில் பாரதத்தின் மகத்தான முன்னேற்றமாகும். அறிவைத் தேடுவதில் பிரபஞ்சத்தை பிரகாசமாக்கியுள்ள எமது விஞ்ஞானிகள் அதனை மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களது பலம் எங்கள் பெருமை’ எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.