Friday, May 17, 2024
Home » ரூ.80 கோடி 40 இலட்சம் அபின் கஞ்சா பொதிகள் மீட்பு
வட கடலில் அதிரடிப் பாய்ச்சல்

ரூ.80 கோடி 40 இலட்சம் அபின் கஞ்சா பொதிகள் மீட்பு

by damith
January 9, 2024 7:10 am 0 comment

வட மாகாணத்தில் வரலாற்றில் முதன் முறையாக 86 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான அபின் மற்றும் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கற்கோவளம் கடற்கரையில் வைத்து நேற்று பருத்தித்துறை பொலிஸார் இவற்றை மீட்டனர்.

வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தக் கடற்கரை பகுதியில், படகில் பயணம் செய்த மர்ம நபர்களால் பொதியொன்று வீசப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து விரைந்த பொலிஸார் இப்போதைப் பொருட்களை மீட்டெடுத்தனர்.

பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் பருத்தித்துறை பொலிஸார் நேற்றுக் காலை குறித்த இடத்திற்குச் சென்று மறைவாக இருந்து அவதானித்துள்ளனர். நீண்டநேரமாகியும் குறித்த பொதியை எடுத்துச் செல்வதற்கு எவரும் வராத நிலையில், பொலிஸார் குறித்த பொதியை கைப்பற்றி சோதனை செய்துள்ளனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தரவுகளுக்கு அமைவாக இவை,கைப்பற்றப்பட்டன. அபின் போதைப் பொருள் ஒரு கிலோ ரூ. ஒரு கோடி 80 லட்சம் ரூபாவாகும்.

கைப்பற்றப்பட்ட 48 கிலோ அபினின் மொத்த பெறுமதி ரூபா 86 கோடி 40 லட்சம் எனவும், ரூ.44 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 28 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருள் நாட்டில் பாவனையில் இல்லாத நிலையில், கடல்வழியாக நாட்டுக்கு கொண்டுவந்து வேறு நாடுகளுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் இவை,கடத்தி வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தளவு பெருந்தொகை அபின் கைப்பற்றப்பட்டுள்ளமை வரலாற்றில் முதன்முறை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கைப்பற்றபட்ட அபின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்க, நடவடிக்கை எடுத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் விஷேட, கரவெட்டி தினகரன் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT