- ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு, மருத்துவர்களுக்கான கொடுப்பனவு மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்து, இம்மாதத்திலேயே வழங்குவதற்கு நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கவுள்ள 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை இம்மாதம் வழங்குவது, மருத்துவர்களுக்கான கொடுப்பனவான 35,000 ரூபாவை 70,000 ரூபாவாக அதிகரித்து வழங்குவது மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கான கொடுப்பனவை 25% அதிகரிப்பது உள்ளிட்ட யோசனைகளை முன்வைத்து ஜனாதிபதி இந்த யோசனையை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையிலே இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்தவகையில், அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை இம்மாத சம்பளத்துடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட இம்மூன்று யோசனைகளையும் விரைவாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கடந்த வருடத்தைவிட அரச வருமானம் திறைசேரிக்கு கிடைப்பது அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய உற்பத்தியில் 8.3% மாக இருந்த அரசாங்க வருமானம் தற்போது 10% மற்றும் 11% மாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறு அரசாங்கத்திற்கான வருமானம் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கும் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்களின் சேவை இத்தகைய தருணத்தில் நாட்டிற்கு மிகவும் அவசியமானது என்பதை தெளிவுபடுத்திய அவர், அவர்களை தொடர்ந்தும் நாட்டில் தக்க வைத்துக்கொள் வது அவசியமானது என்றும் மக்களுக்கு அவர்களுடைய சேவை அவசியமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய நன்மைகளையும் அதிகரிப்பதானது நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்