Home » பொருளாதார முன்னேற்றத்திற்கு மதநல்லிணக்கத்தின் அவசியம்

பொருளாதார முன்னேற்றத்திற்கு மதநல்லிணக்கத்தின் அவசியம்

by damith
January 8, 2024 6:00 am 0 comment

வடமாகாணத்திற்கு நான்கு நாட்கள் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அம்மாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சர்வமதத் தலைவர்கள், கல்வி சமூகத்தினர், சிவில் சமூகத்தினர், சட்டத்தரணிகள், கலைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இந்தச் சந்திப்புக்களின் போது பல்வேறு தரப்பினரும் தாங்கள் முகம்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்த அதேநேரம், அவர்களது எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

அத்தோடு பொருளாதார ரீதியில் நாட்டை மீளக்கட்டியெழுப்புவது குறித்தும் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்திக்கு வடபகுதியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் எடுத்துக் கூறியுள்ளார். குறிப்பாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் கல்வி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பின் போது, ‘இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை’ என வலியுறுத்திய ஜனாதிபதி, ‘அனைத்து மக்களும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு மதநல்லிணக்கம் மிகவும் முக்கியமானது’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றமடைய வேண்டும். மக்களுக்கு வளமானதும் சுபீட்சமானதுமான வாழ்வு கிடைக்கப்பெற வேண்டும். அதற்கு பொருளாதார அபிவிருத்தி இன்றியமையாதது. அதேநேரம் இனியும் பின்தங்கிய பொருளாதார நாடாக இருக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் நாட்டின் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் உள்ளனர்.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதி முன்வைத்திருக்கும் இந்த வலியுறுத்தலை மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். பல்லின மக்கள் வாழும் நாடொன்றின் அபிவிருத்திக்கும் பொருளாதார சுபீட்சத்திற்கும் இன, மத ரீதியிலான பார்வையும் பிளவும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது. அவை பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாகவே இருக்கும். இதற்கு உலகில் நிறையவே அனுபவங்கள் உள்ளன. மதநல்லிணக்கம், சகவாழ்வு நிலவும் பல்லின மக்கள் வாழும் நாடுகள் அனைத்தும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இந்நாடு சுதந்திரமடையும் போது ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தது. ஏனைய நாடுகள் இலங்கையை விடவும் பின்தங்கிய நிலையில் இருந்தன. ஆனால் அந்த நாடுகளில் பெரும்பாலானவை கடந்த ஏழு தசாப்த காலப்பகுதியில் இலங்கையை விடவும் பல மடங்கு முன்னேற்றமடைந்து விட்டன. அவற்றில் பல்லின மக்கள் வாழும் பல நாடுகளும் உள்ளன.

இதன் ஊடாக பல்லின மக்கள் வாழும் நாடொன்றின் முன்னேற்றத்திற்கு இன, மத ரீதியிலான ஒற்றுமையினதும் சகவாழ்வினதும் அவசியம் தெளிவுபடுத்தப்படுகின்றது.

இந்த நிலையில் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகிறது. அதன் முக்கியத்துவமும் பரவலாக உணரப்பட்டிருக்கிறது. நாடென்ற ரீதியில் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். அதற்கு சர்வமதத் தலைவர்களும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். பல்லின மக்கள் வாழும் நாடொன்றின் பொருளாதார வளர்ச்சிக்கு மதநல்லிணக்கம் இன்றியமையாததாகும்.

இப்பின்னணியில்தான் ஜனாதிபதி, ‘நாட்டின் சமய, கலாசார விழுமியங்களை முன்வைத்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆக்கபூர்வ வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அதற்கு சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.

ஆகவே சர்வமத நல்லிணக்கம் நிறைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதியில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திடும். மக்கள் வளமான பொருளாதார வாழ்வைப் பெற்றுக்கொள்ள அது வழிவகுக்கும். அதனால் மதநல்லிணக்கத்துடன் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கி பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பது மிகவும் முக்கியமானது. மக்களின் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT