Monday, May 6, 2024
Home » மீண்டும் இஸ்ரேலுக்கு விரைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்
பிராந்திய பதற்றத்திற்கு மத்தியில்

மீண்டும் இஸ்ரேலுக்கு விரைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்

by sachintha
January 5, 2024 6:00 am 0 comment

காசாவில் போர் நீடித்து, லெபனானில் ஹமாஸ் பிரதித் தலைவர் படுகொலை செய்யப்பட்டு, ஈரானில் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று (04) மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு விரைந்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் வெடித்த பின் நான்காவது முறையாக இடம்பெறும் பிளிங்கனின் இஸ்ரேலுக்கான விஜயத்தை அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்தபோதும் அது தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

டெஹ்ரானில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டதற்கு ஈரான் உடனடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கா, இஸ்ரேல் இதனைச் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறியது பெய்ரூட் புறநகரில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் பிரதித் தலைவர் கொல்லப்பட்ட நிலையிலேயே யாரும் உரிமை கோராத டெஹ்ரான் குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் பிளிங்கனின் இஸ்ரேலிய விஜயம் பற்றி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியூ மில்லர், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு பற்றி கவலையை வெளியிட்டிருந்தார்.

“ஏற்கனவே இருக்கும் மோதல் மேலும் விரிவடைவதை பிராந்தியத்தில் உள்ள எந்த ஒருவரும் எந்த நாடும் விரும்புவதில்லை, உலகில் எந்த நாடும் விரும்புவதில்லை” என்றார்.

ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் படைகள் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்று வரும் லெபனானுடனான இஸ்ரேலிய எல்லைக்கு கடந்த புதன்கிழமை (03) சென்ற இஸ்ரேல் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலெவி, “துருப்பினர் உச்ச தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இந்நிலையில் லெபானின் நகூரா கிராமத்தில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் நான்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய போர் விமானம் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதனை தகர்த்ததாக லெபனான் அரச செய்தி நிறுவனம் கூறியது. இதில் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் பதற்றம் யெமன் வரை பரவி இருக்கும் சூழலில், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் மீதான அதன் தாக்குதல்களை உடன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகள் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்திற்கு ஆதரவாக யெமன் ஹூத்திக்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை காசா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இஸ்ரேலிய அறிவுறுத்தலின் கீழ் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அல் மவாசி பகுதிக்கு அருகில் புதன்கிழமை இரவு தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்றன.

அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தின் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மிக வயது குறைந்தவராக ஐந்து வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதோடு பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவின் மேலும் பல பகுதிகளில் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருந்ததோடு தெற்கின் டெயிரல் பலாஹ்வில் கடும் தாக்குதல்கள் பதிவானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கான் யூனிஸில் இருக்கும் பலஸ்தீன செம்பிறை சங்க தலைமையக கட்டடத்தின் ஐந்தாவது மாடி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் அறுவர் காயமடைந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான போரில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 22,500ஐ நெருங்கியுள்ளது. அந்த குறுகிய நிலப்பகுதியில் வாழும் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT