Saturday, May 18, 2024
Home » கவாஜாவின் கறுப்பு பட்டிக்கு எதிரான ஐ.சி.சி. குற்றச்சாட்டுக்கு மேன்முறையீடு

கவாஜாவின் கறுப்பு பட்டிக்கு எதிரான ஐ.சி.சி. குற்றச்சாட்டுக்கு மேன்முறையீடு

by mahesh
December 23, 2023 10:34 am 0 comment

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது காசாவில் உள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக கறுப்புப் பட்டியை அணிந்த அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா மீது சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் (ஐ.சி.சி.) குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் அந்த குற்றச்சாட்டு எதிராக மேன்முறையீடு செய்ய அவர் தீர்மானித்துள்ளார்.

பேர்த் டெஸ்ட் போட்டியில் “அனைத்து உயிர்களும் சமம்” மற்றும் “சுதந்திரம் ஒரு மனித உரிமை” என்ற வாசகங்களைக் கொண்ட பாதணியை அணிவதற்கு 37 வயது கவாஜா திட்டமிட்டபோதும் அதனை அவர் கடைசி நேரத்தில் கைவிட்டார். பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அந்த பாதணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் ஆடை மற்றும் உபகரணங்கள் ஒழுங்குமுறையை மீறி இருப்பதாக ஐ.சி.சி தீர்மானித்துள்ளது. எனினும் எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட கவாஜாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் மீதும் கைப் பட்டியை அணிவது அல்லது ஐ.சி.சி மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் அனுமதி இன்றி பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆடுகளத்தில் செய்தியை பதிவு செய்தால் தண்டனைகளுக்கு முகம்கொடுப்பார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த இஸ்ரேல் மற்றும் காசா போரில் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களில் 20,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி விதிகளின்படி, சர்வதேச போட்டிகளின்போது வீரர்கள் அரசியல், சமய அல்லது இன ரீதியான காரணங்களை காட்டி செய்திகளை வெளிப்படுத்த முடியாது.

முஸ்லிம் ஒருவரான கவாஜா, தனது செய்தி “மனிதாபிமான முறையீடு” என்றும் ஓர் அரசியல் செய்தியல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“தனிப்பட்ட செய்திக்கு தேவையான ஒழுங்கு விதியின்படி காட்சிப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் மற்றும் ஐ.சி.சியின் முன் அனுமதியை பெறாது பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் தனிப்பட்ட செய்தி ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்” என்று ஐ.சி.சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு ‘மற்ற மீறல்’ வகையின் கீழ் ஒரு மீறலாகும் என்பதோடு முதல் குற்றத்திற்கான அனுமதி ஒரு கண்டனமாக அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன கொடியின் நிறங்களான சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் எழுதப்பட்ட பாதணிகளை அணியக் கூடாது என்று கூறியபோது அந்த முடிவுக்கு எதிராக போராடியதாக கவாஜா குறிப்பிட்டார்.

சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்ட வீடியோ செய்தியில், காசாவில் உள்ள பொதுமக்களுக்கான தமது ஆதரவை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.

“மைதானத்தில் எனது பாதணியை அணிய முடியாது என்று ஐ.சி.சி கூறியது. ஏனென்றால் அதன் வழிகாட்டலின் கீழ் அது அரசியல் செய்தி ஒன்றாக இருக்கிறது என்று நம்புவதாக அது கூறியது. அதனை நான் நம்பவில்லை.

நான் அவர்களது நிலைப்பாடு மற்றும் முடிவை மதித்தபோதும் நான் அதற்கு எதிராக போராடி அனுமதி பெற முயற்சித்தேன்” என்று கவாஜா குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட கருத்துகளை வெளியிடும் எமது வீரர்களின் உரிமைக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, ஆனால் ஐ.சி.சி விதிகளை அவர்கள் கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தது.

2014இல் இங்கிலாந்து சகலதுறை வீரர் மொயீன் அலி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது காசாவுக்கு ஆதரவை வெளியிட்டு கைப்பட்டி ஒன்றை அணிவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கறுப்புப் பட்டி அணிந்ததற்காக ஐ.சி.சி சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுக்கு எதிராக முறையீடு செய்யப்போவதாக குறிப்பிட்டிருக்கும் கவாஜா, அந்த கறுப்புப் பட்டி ஒரு “தனிப்பட்ட இறங்கல் செய்தி” என்று தெரிவித்துள்ளார். எனினும் அடுத்த டெஸ்ட் போட்டியில் அதனை மீண்டும் அணிய எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT