சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இலஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21 ஆம் திகதி வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011இல் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்களை சுட்டிக்காட்டி இலஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளது. பொன்முடியின் மனைவிக்கு 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் தனியாக வர்த்தகம் செய்கிறார். இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்று பொன்முடி வழக்கறிஞர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பிலான வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 27 ஆம் திகதி எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பானது தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று (19) இந்த வழக்கில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்திருக்கிறார்.அந்த தீர்ப்பில், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவு இரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வரும் டிசம்பர் 21ஆம் திகதி பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. பொன்முடியும் அவரது மனைவியும் 64.90% வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது