Sunday, May 19, 2024
Home » சமூக சேவையாளர் முஹமட் முஸம்மில் ஆளுமை விருது வழங்கி கௌரவிப்பு
நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலுக்கு உணவுகளை விநியோகிக்கும்

சமூக சேவையாளர் முஹமட் முஸம்மில் ஆளுமை விருது வழங்கி கௌரவிப்பு

by mahesh
December 13, 2023 12:02 pm 0 comment

சங்கவி சினிமா மற்றும் தியேட்டர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மற்றும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் ஊடக அனுசரணையுடன் கலை இலக்கியம் சமூகவியல் சார்ந்த ஆளுமை விருது வழங்கும் வைபவம் கண்டி கெப்பட்டிப்பொல ஞாபகார்த்த மண்டபத்தில் தினகரன் வாரமஞ்சரி மற்றும் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மத்திய மாகாண சபையின் முதல்வர் சரத் ஏக்கநாயக அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பேராதனை துரை மனோகரன், தேசமானிய பெ. பழனியப்பன், கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் பொருளாளர் மக்கள் மாமணி ஏ. சிவசுப்பிரமணியம், மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் எஸ். பரமேஸ்வரன், முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கண்டியைச் சேர்ந்த சமூகத்திற்காகப் பங்காற்றி வருகின்ற திருமதி சந்தரவதனா ரட்ணராஜ குருக்கள் மற்றும் வேலுப்பிள்ளை சிதம்பரநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இதில் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் விசேட அம்சமாக சமூகப் சேவையாளர் முஹமட் முஸம்மில் தம் சேவையின் மூலம் வளர்ந்துயர்ந்து ஒளிர்வதை நாம் அவதானித்து வருகின்றோம். இவர் சமூகப் பணிகளுக்காக தேசமானிய, தேசகீர்த்தி போன்ற பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் சான்றுகளையும் கௌரவங்களையும் பெற்ற ஒருவர்.

இவர் பசுமலை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபையின் உப தலைவர், சமூகப் பணிகளை அயராது திறன்படச் செய்யக் கூடியவர். இவர் இத்தகைய பணிகளை நீண்ட காலமாக செய்து வருவதன் காரணமாக கொழும்பிலுள்ள சங்கவி சினிமா மற்றும் தியேட்டர் நிறுவனத்தினர் கண்டியில் நடத்திய ஆளுமை விருது வழங்கும் விழாவில் சமூக செயற்பாட்டாளர் முஹமட் முஸம்மிலுக்கும் எமது சமூகத்தின் பெரும் பேறாகக் கருதி ஆளுமை விருது வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* நேர்காணல் ; ஜீவராஜ்

உங்கள் ஆரம்ப வாழ்க்கை பற்றி கூறுவீர்களா?

என் பெயர் முஹமட் ஹமீட் முஸம்மில். ஹோல்புரூக் அக்கரப்பத்த​ைனயில் பிறந்தேன். தந்தையின் பெயர் அப்துல் ஹமீட், அவர் ஒரு சாதாரண வர்த்தகர். தாயார் பெயர் ஸெயிதுன் பீபீ.

நாங்கள் ஆரம்பத்தில் கிரெண்ட்லி அப்ப டிவுசனில் வசித்தோம். அங்குதான் ஆரம்ப பாடசாலையில் ஆறாம் ஆண்டு வரையிலும் கல்வி கற்றேன். படிக்கின்ற சமயத்தில் குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சினை இருந்தது. அப்பொழுது தந்தை சற்று சுகயீனமுற்றுக் காணப்பட்டார். தம்பி, தங்கைமார்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் படிப்பிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி எனது படிப்பை இடைநிறுத்தி விட்டு தோட்டச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்தேன். இதில் நிறைய அனுபவம் இருக்கிறது. அதன் பின்பு கருப்பட்டி தயாரித்தல், மிக்ஷ்ர் உணவு வகைகள் தயாரித்தல் போன்ற கைத்தொழில்களில் ஈடுபட்டேன். இதன் மூலம் ஒரு படி முன்னேறி வேலைக்கு ஆட்களையும் இணைத்துக் கொண்டு செயற்பட்டேன். அங்கு 22 வயது வரையிலும் வாழ்ந்து வந்தேன். 1996 களில் ஹோல்புரூக் பகுதிக்கு வந்தேன். அதன் பின்பு நகரில் கடையொன்றை ஆரம்பித்தேன். இக்கால கட்டத்தில் திருமணம் செய்தேன். மனைவி ரஹ்மா பீபி. அவர் தலாவாக்கலையைச் சேர்ந்தவர். நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் அஸ்லம். இரண்டாவது மகன் அக்ரம், இவர்கள் இருவரும் நன்கு கல்வி கற்றுள்ளார்கள். மூன்றாவது பிள்ளை மகள் ஆயிஷா பானு. இவர் இம்முறை க. பொ. த உயர் தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார். நான்காவது பிள்ளை அஸ்மியா. அவர் ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டு கல்வி பயிலுகின்றார்.

நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள்?

அப்பொழுது நான் ஆரம்பத்தில் கடையை செய்து கொண்டு செல்லும் போது பெரும் போட்டித் தன்மை காணப்பட்டது. நேர்மையுடன் செய்து கொண்டு செல்லும் வியாபாரத்தை இல்லாத, பொல்லாதவற்றைச் சொல்லி நிறைய சூழ்ச்சிகள் செய்து முடக்கினார்கள். அந்த வகையில் பொலிஸாரின் பல கெடுபிடிகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பொதுவாக இப்படியான சொல்லொண்ணாத் துயரங்களையும் அனுபவித்துக் கொண்டுதான் இந்த உயரிய இலக்கை அடைந்தேன். அல்லாஹ் நேர்மையானவன். கருணையாளன். அவன் எல்லாவற்றையும் இலகுபடுத்தித் தந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலுக்கு அதிகளவிலான உணவுகளை விநியோகித்து வருகின்றேன். சரியான முறையில் வியாபாரத்தைப் பேணி நடந்து வந்தமையால் எத்தகைய சவாலாக இருந்தாலும் அதனை நேர்மையோடு வெற்றி கொண்டு வியாபாரத்தின் புனிதத்தை பேணி இற்றை வரையிலும் செய்து வருகின்றேன். தற்போது சந்தேகக் கண் கொண்டு பார்த்தவர்கள் எல்லோரும் உற்ற நண்பர்களாகவும் சிநேகிதர்களாவும் உள்ளார்கள். இன்று என்னைப் போல் நல்ல மனிதர் எவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு எல்லோரும் நேசமாகப் பழகி வருகிறார்கள்.

சமூகம் பணிகள் குறித்து…

இப்பிரதேசத்தில் பலகையிலான பள்ளிவாசல் ஒன்றுதான் இருந்தது. அது மிகவும் பாதிப்பான சிறிய பள்ளி. எப்பொழுது உடைந்து விழும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் இங்கு 127 குடும்பங்கள் உள்ளன. ஆதலால் தொழுகைக்கு இடம்போதாது. அதற்கென பெரியளவில் வருமானம் கூட இல்லை. அங்கு சேரும் பணம் அங்கு கடமைபுரியும் மார்க்க உலமாக்களுக்குப் போதாது. நாங்கள் கையிலுள்ள பணத்தை போட்டுத்தான் சம்பளம் கொடுப்போம். 1980 களுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் இப்பள்ளிவாசலுக்கு இடம்கொடுத்தவர்தான் இப்பள்ளிவாசலின் தலைவர் முஹமட் பாரூக் ஹாஜியார். அவர் மிகவும் நல்ல மனிதர். அருகில் பெரிய மலை ஒன்று இருந்தது. மழை பெய்தால் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு மூடிவிடும். இது இப்படியே இருப்பதா? கட்டுவதில்லையா? இல்லையேல் இவை குறித்து நான் முயற்சி செய்யவா என்று நிர்வாகத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்தேன். அதற்கு தலைவர் சம்மதம் தெரிவித்தார். அதற்கு இணங்க நான் இற்றை வரையிலும் அதன் கட்டிட நிர்மாணப் பணிகள் முதல் அதனுடைய மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றேன். இப்படியாக பள்ளிவாசலின் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டு செல்லும் போது ஊர் மக்கள் சேர்ந்து பள்ளிவாசலின் தலைவராகக் கடமையைப் பொறுப்பேற்று நடத்தும் படி வேண்டினார்கள்.

ஆனால் நான் பள்ளிக்காக காணியை நன்கொடையாக வழங்கிய தலைவரின் நன்மதிப்பை தொடர்ந்து பேண வேண்டும் என்ற அடிப்படையில் விட்டுக் கொடுத்து அவருக்குப் பக்கபலமாக இன்று வரையிலும் உப தலைவராகச் செயற்பட்டு வருகின்றேன். அவர் ஒரு நல்ல மனிதர். அவர் போன்ற நல்ல மனிதர்கள் தொடர்ந்து எம்மோடு இருக்க வேண்டும். அது தான் சிறப்பு. அவர் தலைவராக இருந்தாலும் அவருடைய நிழலாக இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றேன்.

அந்த வகையில் பள்ளி கட்டுவதற்கான தீர்மானத்தை எடுத்து அதைக் கட்டுவதற்கான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அதன் பின்பு இது தொடர்பில் நிர்வாக சபையுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினோம். ஒரு தீர்மானமும் எட்டவில்லை. அதற்குப் பின் அப்பொழுது நான் உம்ரா புனித யாத்திரை சென்றேன். அங்கு நான் அந்தப் புனிதமான இடத்தில் வைத்து அல்லாஹ்விடம், ‘உனக்காக ஒரு இல்லத்தைக் கட்ட வேண்டும். அதற்கான உதவிகள் இன்றி நாங்கள் தவிக்கின்றோம். நினையாப்புறத்தில் இருந்து அதற்கான உதவியை தந்தருள்வாயாக’ என்று முதன் முதலாக பிரார்த்தனை செய்தேன். உண்மையிலேயே மனமுருகிக் கேட்டேன். இந்தப் பிரார்த்தனையினை மக்காவிலும் மதீனாவிலும் கேட்டேன். அங்கு இருந்து வந்தவுடன் பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளுக்காக நிர்வாக சபையின் ஒத்துழைப்போடு நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். அதில் கிடைக்கப்பெற்ற நிதி உதவியின் மூலம் பெரிய மதில் சுவர் ஒன்றை நிர்மாணித்தோம். அது சுமார் 90 இலட்சம் பெறுமதியான வேலையாகும். அது 72 அடி நீளமும் 19 அடி உயரமும் 3 அடி அகலமான கொங்கிரீட் பெரிய மதிலைக் கட்டினோம்.

அவ்வாறு செய்து கொண்டு செல்லும் போது பல இடங்களுக்கு பணம் சேகரிப்புக்காகச் சென்றோம். ஆனால் அது சாத்தியமாகவில்லை. சுமார் சிறு தொகை நிதிதான் கிடைத்தது.

ஒரு நாள் நுவரெலியாப் பள்ளிவாசலில் தொழுது கொண்டு இருக்கும் போது இப்பள்ளிவாசலின் அவல நிலை குறித்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அப்பள்ளியில் இருந்த மௌலவி அக்ரம் என்னருகில் வந்து சாடையாக தட்டி விட்டுச் சென்றார். தொழுது விட்டு செல்லும் போது அவரைப் போய் நேரடியாகச் சந்தித்தேன். அவரிடம் எங்களது பள்ளிவாசல் மழை பெய்தால் மண் சரிவினால் மூடப்படுகிறது. அதைக் கட்ட வழியில்லை. அதற்காக பணம் சேகரிக்க முயற்சிகள் செய்தோம். இன்னும் பலன் எவையும் கிடைக்க வில்லை. ஒரு வழியில்லாமல் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம் என்று அவரிடம் கூறி விட்டு அரபிகள் யார் சரி வரவில்லையா என்று கேட்டேன். அவர் சுற்றுலா வரும் அரபிகளுக்கு வழிகாட்டியாக செயற்படக் கூடியவர். அதற்கு அவர் இப்போது யாருமே வருவதில்லை. புத்தளம் பகுதிகளில் ஒன்று, இரண்டு பேர் பள்ளிகள் செய்பவர்கள் இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் யாரும் இல்லை என்று சொன்னார்.

அவ்வாறு கதைத்துக் கொண்டு சென்றவர் நாளைக்கு ஒரு குரூப் வருகிறது. அவர்கள் மக்காவில் இருந்து வருகிறார்கள் என்று சும்மா சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு சென்றார். அப்பொழுது நான் என்ன மக்காவில் இருந்து வருகிறார்கள் என்றால் கட்டாயம் இந்த எங்களுடைய பள்ளி விடயமாக பேசுங்கள். இன்று நான் மனதில் இது பற்றி நினைத்துக் கொண்டு தான் வந்தேன். எப்படியாவது ஞாபகப்படுத்துங்கள் என்று அவரிடம் கூறினேன். அவர் அதற்கு இயலாது என்று கூறினார். இயலாது என்று சொல்லாமல் அல்லாஹ்வுக்காக கூறுங்கள் என்று அவரிடம் தெரிவித்தேன்.

தொடர்ந்து சும்மா ஒரு வார்த்தையாவது கேளுங்கள். அவர்கள் செய்தாலும் சரி, செய்யா விட்டாலும் சரி என்று அவரிடம் தெரிவித்து விட்டு வந்து விட்டேன். பின்னர் அவர் அங்கு வருகை தந்த அரபிகளிடம் இப்பள்ளி பற்றி கூறியுள்ளார். அதற்கு அவர்கள் அதனைப் பார்ப்போம் என்று தெரிவித்தவுடன் மௌலவி அக்ரம் அவர்கள் என்னிடம் பள்ளி தொடர்பிலான ஆவணங்களை எடுத்து வையுங்கள் என்று கூறி விட்டு இது தொடர்பில் பெரியளவில் ஆசை வைத்திட வேண்டும் என்றும் தொலைபேசியில் கூறினார்.

மறுநாள் காலையில் மௌலவி அக்ரம், என்னை வரும்படி அழைப்பு விடுத்தார். உடனே கிரேண்ட் ஹோட்டலுக்குச் சென்றேன். அப்பொழுது நான் அங்கு எடுத்துச் சென்ற ஆவணங்களை அவர்கள் பார்வையிட்டார்கள். சும்மா சென்று பார்ப்போம் என்று கூறினேன். அதற்கு உடனே அவர்கள் குடும்பத்துடன் வந்தார்கள். அது எப்போது விழும் என்ற நிலையில் இருந்தது. சுற்றிவர சீமெந்து ஏனைய பகுதிகள் எல்லாம் பலகையால் மறைக்கப்பட்டிருந்தது. சீமெந்து வெடித்து விழும் நிலையில் இருந்தது. இந்தப் பள்ளியின் அவல நிலையினை நேரடியாக பார்த்த அரபி அழுது விட்டார். அப்பொழுது 50 இலட்சம் ரூபா செலவில் பள்ளியினை நிர்மாணித்துக் கொள்வதற்கு ஆவன செய்வதாக உடன் உறுதியளித்தார். 72 அடி நீளமும், 78 அடி அகலமுமிக்க பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் இது.

அவர் வெளிநாடு சென்றவுடன் கொழும்பிலுள்ள செல்வந்தரின் ஊடாக அவர் பணங்களை கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி வைத்தார். நாங்கள் படிப்படியாக பள்ளிவாசலைக் கட்டி முடித்தோம். இதன் பிறகு ஊரில் உள்ளவர்கள மற்றும் வெளிப்பிரதேசங்களிலுள்ள செல்வந்தர்கள் என இதன் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக உதவி செய்தார்கள். இன்று ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நிரப்பமாக நின்று தொழுகை செய்யக் கூடிய மிகவும் அழகிய ஒரு சம்பூரணமான பள்ளிவாசலைக் கட்டி முடிப்பதற்கு எனது தலைவர் நிர்வாக சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் நானும் முழு மூச்சாக நின்று செயற்பட்டுள்ளேன் என்று கூறிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இதில் என்னுடைய உடல் உழைப்பு மட்டுமல்ல என்னுடைய பங்களிப்பும் இருந்து கொண்டிருக்கிறது. இச்சேவையினை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் பொருந்திக் கொள்ள வேண்டும். ஒரு கோடி இருபது இலட்சம் செலவில் இப்பள்ளிவாசலுக்கு பாரிய மதில் நிர்மாணிக்கப்பட்டது.

எந்நேரமும் பள்ளியில்தான் இருப்பேன். காலையில் விடிந்தால் சுபஹ் தொழுது விட்டு மாலையில் மஹ்ரிப் வரையிலும் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக என்னை முழுமையாக அர்ப்பணம் செய்திருந்தேன். இந்தப் பள்ளிவாசல் கட்டுவதன் ஊடாக அல்லாஹ்வின் உதவியினை நேரடியாகப் பார்த்தேன் என்றுதான் சொல்லாம். ஒரு மூன்றரைக் கோடி மட்டில் இதற்காக செலவு செய்தோம். இதற்காக பணம் எங்கு இருந்து வந்தது? யார் செய்தார்? என்று தெரியாத அளவுக்கு ஒரு குறுகிய காலத்தில் இப்பள்ளிவாசலை கட்டுவதற்கு நான் பங்களிப்புச் செய்துள்ளேன்.

இவை தவிர, என்னுடைய சொந்த நிதியின் மூலம் பல்வேறு இடங்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காக மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகின்றேன். அவ்வப் போது மக்களின் தேவைகள் அறிந்து பொது வேலைகளைச் செய்து வருகின்றேன். சமீபத்தில் எங்கள் பிரதேசத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிரந்த அலுவலக வசதிகள் இல்லை. நான் அவருக்கு அதனை நிர்மாணித்துக் கொடுப்பதாக உறுதியளித்தேன். இப்படி எத்தனையோ விதமான பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றேன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT