Monday, May 13, 2024
Home » ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் அறிமுகமும் நேர்மையான தேசத்தின் உருவாக்கமும்

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் அறிமுகமும் நேர்மையான தேசத்தின் உருவாக்கமும்

இன்று ஊழலுக்கெதிரான சர்வதேச தினம் (டிசம்பர் 09)

by gayan
December 9, 2023 6:22 am 0 comment

‘ஊழலுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு நீதித்துறைக்கான அனுசரணை திட்ட நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் தாபனம் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ள டிசம்பர் மாதம் 09ஆம் திகதியான இன்றைய தினம் மேல்மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 475 பேரின் பங்குபற்றுதலுடன், இளைய தலைமுறையின் மனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக நேர்மையான தேசத்தினை உருவாக்கும் நோக்கில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலின் ‘கிரேன்ட் மார்கீ’ மண்டபத்தில் நிகழ்வை நடத்துகின்றது.

வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிற்கு ஊழல் மோசடிகள் எந்தளவு பாரதூரமானது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் தாபனம் விஷேட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. நாடொன்றில் ஊழலும் மோசடியும் தலைவிரித்தாடுவதன் காரணமாக அந்நாட்டு மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட வேண்டிய எவ்வளவோ பணம் வீண்விரயமாவதுடன், நிலைத்திருக்கும் அபிவிருத்தியை நோக்கிய நாடொன்றின் நகர்வில் ஊழல் மோசடியானது பாரதூரமான பின்னடைவை ஏற்படுத்தும் என்பது ஊழல் தொடர்பிலான ஆய்வு முடிவுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறான ஆய்வுகளின் பெறுபேறாகவே ஐக்கிய நாடுகள் தாபனம் மூலம் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சமவாயம் ஏற்றங்கீகரிக்கப்பட்டதுடன் உலகின் 140 நாடுகள் அச்சமவாயத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளதுடன் தற்போது எல்லாமாக 190 நாடுகள் சமவாயத்தில் அங்கத்தவர்களாயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊழலுக்கு எதிரான இச்சமவாயத்தில் கைச்சாத்திட்ட நாடுகளில் ஆசிய கண்டத்தில் கைச்சாத்திட்ட முதல் நாடாக இலங்கை விளங்குவதுடன், உலக நாடுகளுக்கிடையில் ஏற்றங்கீகரித்த இரண்டாவது நாடாகவும் மிளிர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மூலம் 2003 ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் குறிக்கோள்களாவன.

ஊழலைத்தடுப்பதற்கும், இல்லாதொழிப்பதற்கும் உதவும் வகையிலான பொருத்தமான சூழலை ஏற்படுத்தல்.

விசேடமாக விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பொறுப்புக்களை சிறப்புற மேற்கொள்வதற்கான பொறிமுறையைப் பலப்படுத்தல்.

ஊழலைத் தடுத்து நிறுத்தும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டல் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி நெறிகளை நடாத்துதல்.

தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு தேவைகளை உறுதிப்படுத்தும் வகையிலான உபாயங்களை அறிமுகப்படுத்தல்.

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சமவாயம் மற்றும் ஊழலுக்கு எதிரான தேசிய செயற்றிட்டத்தை சிறந்த திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்துவதற்கான விசாரணைப் பொறிமுறைகளை ஸ்தாபித்தல்.

உலக நாடுகளுக்கே பெரும் சவாலாக விளங்கும் ஊழல் மோசடிகளானவை இலங்கைக்கும் பொருந்துவதாகவே உள்ளது. ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கு இச்சமவாயமானது அளப்பரிய வாய்பினை ஏற்படுத்தித் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இலஞ்ச சட்ட வரலாற்றில் புதிய அத்தியாயம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் முகிழ்ப்புடன் ஆரம்பமாகின்றது. தெற்காசியாவிலேயே பலம் வாய்ந்த சட்டமாக 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் 2023 செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஏலவே இருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டமாக பரிணாமம் அடைந்துள்ள போதிலும், நீக்கப்பட்டுள்ள இலங்கையின் இலஞ்ச சட்டத்தின் உருவாக்கம் பற்றிய வரலாற்றுப் பின்புலம் தொடர்பில் சுருக்கமாக கவனம் செலுத்துதல் பின்னணி அறிவினை பெறவும் புதிய மாற்றங்கள், உள்ளீர்ப்புக்கள் தொடர்பில் ஆர்வலர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் கருதி சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றது.

1997 ஆம் ஆண்டில் இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 17 ஆம் திருத்தத்திற்குப் பின்னர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றானது மீயுயர் நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற இரு நீதிபதிகள் மற்றும் குற்றப் புலனாய்வு மற்றும் சட்ட அமுலாக்கம் ஆகியவற்றில் பரந்துபட்ட அனுபவத்துடன் கூடிய ஓர் ஓய்வுபெற்ற சிரேஸ்ட அலுவலர் ஆகியோர் இதற்கு தலைமை வகிக்கின்றனர்.

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 42வது பிரிவின்கீழ், ஆணைக்குழுவிற்கு பெறப்பட்ட தகவல்கள், முறைப்பாடுகள் அல்லது அதன் சுய அடிப்படையில் என பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்க முடியும். அதன் பங்கை நிறைவேற்ற, ஆணைக்குழு பலமட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துகிறது, குறிப்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான மற்றைய விசாரணை அமைப்புகளுடன் கூட்டணியை உருவாக்குவதன் மூலமாக அதனை செய்கிறது. இவ்வகையான ஒத்துழைப்புகள் ஆணைக்குழுவிற்கு முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவும் ஒரு பூரணமான உலகளாவிய அணுகுமுறையை ஊக்குவித்து அதிகாரமளித்து ஊழலை வேரறுப்பதற்கும் பங்களிக்கிறது.

ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான சமுதாயத்தை நோக்கிய பயணத்தில், புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் முக்கியமான இலக்குகளை அடையாளம் காட்டுகிறது இலஞ்சம் மற்றும் ஊழலால் ஏற்படும் கறைகளைத் தவிர்த்தல் மற்றும் அகற்றுதல், நேர்மைத்திறனை ஊக்குவித்தல் மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் பேணுவதாகும். இந்த புதிய சட்டத்தின் ஊடாக, புதிய குற்றங்கள் பல அடையாளம் காணப்பட்டு ஊழல் தொடர்பான நடைமுறைகளின் சில தனித்துவமான அம்சங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கையில் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இலஞ்ச ஊழல் தொடர்பில் அரசதுறை மட்டுமன்றி தனியார்துறை அதிகாரிகளும் பொறுப்புக்கூறல் வேண்டும் என்ற அடிப்படையில் மாற்றங்கள் உள்ளீர்க்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை முழுமையாக இல்லாதொழிப்பதற்காகவும் தொடர்ந்தும் பணியாற்ற இன்றைய ஊழலுக்கு எதிரான சர்வதேச தினத்தில் உறுதிபூணுவோம்.

சால்தீன் எம். சப்ரி…?

உதவிப்பணிப்பாளர் (சட்டம்)

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு

செய்வதற்கான ஆணைக்குழு

தொடர்புகளுக்கு: 0718199787

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT