Saturday, May 4, 2024
Home » கண்டியில் விசேட நிகழ்வும் கண்காட்சியும்
பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு

கண்டியில் விசேட நிகழ்வும் கண்காட்சியும்

புத்திஜீவிகள் உட்பட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்பு

by damith
December 4, 2023 10:27 am 0 comment

கண்டியிலுள்ள 26 அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தின நிகழ்வு கண்டி சிட்டி சென்றர் வளாகத்தில் அமைந்துள்ள சஹஸ் உயன பூங்காவில் கண்டி ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு அமைப்புகளுக்கான சம்மேளனத்தின் ஏற்பாட்டுக் குழுத்தலைவர் வசீர் முக்தார் தலைமையில் இடம்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், மாவட்ட உதவிச் செயலாளர் சந்தமாலி ஹேவாகே, மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அமரசிறி பிரியதாச, முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர் ஒமர் காமில் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கண்டியிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் என்று 26 பிரதிநிதிகள், பாடசாலை பிள்ளைகள், கல்வியியலாளர்கள், சமயப் பெரியார்கள் என பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் விசேடமாக காண்காட்சி 29, 30 மற்றும் டிசம்பர் 1,2 வரை நான்கு நாட்கள் நடைபெற்றன. விசேட செயலமர்வும் இதன்போது இடம்பெற்றது. அதில் பேராதனை பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் தீபிகா உடகம, பேராசிரியர் சித்தீக், செந்தில் சிவஞானம், தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதிநிதி விமல் ரத்நாயக உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதிநாள் தினத்தில் பிரதம அதிதியாக பலஸ்தீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சுஹைர் ஹம்தல்லா கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பலஸ்தீன ஒருமைப்பாட்டு அமைப்புகளின் சம்மேளன ஏற்பாட்டுக் குழுத்தலைவர் வஸீர் முக்தார் இங்கு உரையாற்றும் போது;

உலக நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் மனித நேயத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். மனித நேயத்தை ஆதரிப்பதற்காக நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பது எமது தார்மீகக் கடமையாகும். பலஸ்தீன மக்கள் 70 வருடங்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழுகின்ற சமூகமாகும்.

அந்த சமூகத்தினுடைய இன்னல்கள், துன்பங்கள், போராட்டங்கள், தனித்துவமான சமய வாழ்க்கை முறையில் கலாசாரம். பண்பாடு, கலை, வரலாறு தொடர்பிலான விடயங்கள் நினைவு கூரப்பட வேண்டும். அதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீன் மக்களுடைய சர்வதேச ஒருமைப்பாட்டுத் தினத்தில் அவர்களைப் பற்றி நினைவு கூருவதற்காக வேண்டியும் நியாயத்திற்காக வேண்டியும் இனம், மதம், மொழி வேறு பாடுகளுக்கப்பால் எல்லா இன மக்களும் இந்த இடத்தில் ஒன்றுபட்டு இருக்கின்றோம்.

மத்திய மலைநாட்டில் கண்டி நகரில் வாழக் கூடிய சமூகம் என்ற அடிப்படையில் மனித நேயம் தொடர்பிலான எங்களுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக் கூடிய சமூகம் என்ற வகையில் நாம் இந்த இடத்தில் எல்லோரும் ஒன்று கூடியிருப்பதற்கான முக்கிய காரணம் மனித சமூகத்தை பாதுகாப்பதற்காகும்.

காலாகாலமாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள இந்த பலஸ்தீன மக்களுடைய தியாகத்திற்கும் அவர்களுடைய சுதந்திரமான நிம்மதியான வாழ்வுக்காகவும் இந்நாளில் எமது நல்லாதரவை வழங்குவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட உதவிச் செயலாளர் சந்தமாலி ஹேவகே இங்கு உரையாற்றுகையில்;

சிறுவர்களுக்கான வேலைத்திட்டதின் கீழ் போட்டி ஒன்று சமீபத்தில் இடம்பெற்றது. இதில் சிங்கள, இந்து, முஸ்லிம் சமூக அமைப்புக்கள் யாவும் இணைந்து செயற்பட்டோம். இந்த நிகழ்வினைப் போன்றுதான் அந்த நிகழ்வும் இடம்பெறுகின்றது. நாங்கள் அருகிலுள்ளவர்களோடு இணைந்து நிறைய வேலைத் திட்டங்கள் செய்து வருகின்றோம். சிங்கள, தமிழ் மொழிகளைப் பேசுகின்ற பன்முக கலாசாரங்களைக் கொண்டுள்ள சிங்கள, தமிழ் முஸ்லிம், கிறிஸ்தவ சமூகத்தவர்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமாயின் எங்களிடத்தில் காணப்படும் உள்ளார்ந்த நல்ல விடயங்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். நாங்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் அவை அமையும்.

இந்த நிகழ்வில் நாங்கள் ஒன்றுகூடி இருப்பது எமக்கு கிடைக்காத உலக விவகாரங்கள் பற்றிப் பேசுவதற்காகும். ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் குறிப்பிடும் போது, உலகின் கவனத்தைச் செலுத்துவது முக்கிய காரணத்தை வலியுறுத்தியே என்று அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் எல்லோரும் ஒன்று கூடி இருப்பது கலாசார விடயம் தொடர்பான விழிப்பூட்டலை வழங்குவதற்காகும். நீங்கள் யாராக இருந்தாலும் சரி. நீங்கள் எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி நம் உடம்பினுள் ஓடுவது சிவப்பு நிறத்திலான இரத்தம் ஆகும் என்று சிங்களத்தில் சிறுவர் பாடல்வரிகள் உள்ளன.

உலகில் எவர் எங்கு வாழ்ந்தாலும் அவருடைய இரத்தம் ஒன்றுதான். உலகின் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனம் குறிப்பிடுவது உலகின் எங்கு வாழ்ந்தாலும் ஒரு மனிதனுடைய உரிமை இல்லாமற் செய்யப்படுமாயின் அது பொதுவாக சமூகத்தின் மனித உரிமை மீறலைச் செய்தமைக்குச் சமனாகும். உலகம் பற்றிப் பேசுகின்ற நாம் எம்மோடு அயலில் இருக்கின்ற நட்புறவோடு உள்ளார்ந்த ரீதியாக வாழுதல் வேண்டும் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் மனிதர்கள் என்ற வகையில் அருகில் இருந்தாலும் சரி, எமது நாட்டில் சரி, உலகில் எந்த நாட்டில் வாழ்பவர்களாக இருந்தாலும் காருண்ய மனித நேயத்தோடு நேசித்தல் வாழுதல் வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பலஸ்தீன நட்புறவு ஒன்றியத்தின் இணைப்பதிகாரி நஜா முஹம்மட் உரையாற்றும் போது;

இன்றைய நாள் மிகவும் பெறுமதிமிக்க நாளாகும். ஐக்கிய நாடுகள் சபை பலஸ்தீனத்திற்கான உலக ஆதரவு தினம் என்று பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மலையகத்திலுள்ள சகல மக்களும் ஒன்று சேர்ந்து இந்த பலஸ்தீன தினத்திற்காக நல்லாதரவு வழங்கி வருகின்றனர். எல்லா சமூகத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் நாங்கள் பலஸ்தீன தினத்தை ஆதரித்து இந்த கண்காட்சியை நடத்தி வருகின்றோம். சிவில் சமூக அமைப்புக்கள், மக்கள் குழுவினர்கள், சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், வர்த்தக சங்கங்கள், ஆகியவை இணைந்தே இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தோம்.

இதற்கான பிரதான காரணம் தான் 70 வருட காலம் இந்த உலகில் பலஸ்தீன மக்கள் சொல்லொண்ணாத்துயரத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள். மனித சமூகம் என்ற வகையிலும் வாழ்ந்து வரும் ஒரு பகுதி மக்கள் மிகவும் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடுகளின் அனுசரணையுடன் அவர்களுடைய இடத்தையும் நிலங்களையும் சுவீகரித்துக் கொண்டு இன்னுமொரு நாட்டை உருவாக்கிக் கொண்டு உலகில் மிக மோசமான காரியத்தை இந்த நாட்டில் செய்து வருகிறார்கள்.

அவ்வாறாயின் நாங்களும் உலக மக்கள், நாங்களும் உலக நாட்டுப் பிரஜைகள், நாங்களும் மனிதர்கள், மனித உரிமை தொடர்பில் பேசுகின்றவர்கள் என்ற வகையில் இது தொடர்பில் நாங்கள் அனைவரும் கட்டாயமாக கவனம் செலுத்த வேண்டும்.

நாங்கள் மனிதர்கள் என்ற வகையில் அங்கு இடம்பெறும் மனிதப் படுகொலைகளுக்கு எதிராகவும் அவர்களுடைய நியாயத்திற்காகவும் நல்லாதரவு நல்க வேண்டும். உலக மக்களும் பலஸ்தீன மக்களின் நிலவரம் தொடர்பில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் கதைப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும், அவர்களுக்கு ஆதரவைப் பலப்படுத்துவதற்கும் மீளவும் கௌரவமான சுதந்திரமான வாழ்க்கை முறையினைக் கட்டியெழுப்புவதற்கு உலக மக்கள் அனைவருக்கும் உரித்துடையது என்ற அடிப்படையில் பலஸ்தீன மக்கள் சுதந்திரமான வாழ்க்கை நடத்துவதற்குரிய ஆதரவினை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் தான் கண்டியிலுள்ள 26 அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதன் போது இரண்டாம் நாள் மாபெரும் மாநாடொன்றும் நடத்தப்பட்டது. இந்த வேலைத் திட்டத்தின் மூலம் எமது பாடசாலைப் பிள்ளைகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் ஆகிய அனைவருக்கும் தெளிவான விளக்கங்கள் அறிவார்ந்த காட்சிகளின் ஊடாக காட்டப்பட்டன. அந்த வகையில் இதற்காக நிறையப் பேர் ஆதரவு வழங்கியுள்ளார்கள். இந்த பங்களிப்பு தொடர்ந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர் ஒமர் காமில் உரையாற்றும் போது;

மிலேச்சத்தமான முறையில் பலஸ்தீன மக்களையும் பிள்ளைகளையும் பெண்களையும் கொடிய முறையில் கொன்றொழித்துக் கொண்டிருக்கின்ற தருணத்தில் அவர்களுடைய துன்பத்தில் நாங்களும் கலந்து கொள்வதையிட்டு பெரும் பாக்கியமாக கருதுகின்றோம். அவர்களுடைய மீட்சிக்காகவும் நியாயத்திற்காகவும் வேண்டி அவர்களுக்கு ஆதரவு வழங்குவது இன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன ஆதரவுக்கான தினம் ஒரு பலமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பலஸ்தீன நாட்டு மக்கள் சர்வதேச நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டங்களையே மேற்கொள்கின்றனர். அவர்களுடைய நியாயமாக உரிமையை பெற்றுக் கொள்வதற்கு நாம் அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்குகின்ற சர்வதேச தினத்தில் அவர்களுடைய சுதந்திர தாய் நாட்டுக்கான உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டியது உலக நாடுகளின் தார்மிகக் கடமையாகும்.

முன்னாள் பலஸ்தீன ஜனாதிபதி யஸீர் அரபாத்தின் ஆட்சி காலத்தில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்பொழுது இன்றைய பிரதமர் நெதன் யாகு எதிர்கட்சியில் இருந்தார். அவர் அப்பொழுது இந்த உடன்படிக்கைக்கு எதிராகச் செயற்பட்டார். அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. பலஸ்தீன மக்களின் சிறு குழைந்தைகள், சிறார்கள், பெண்கள், பொது மக்கள் என்று கொன்றொழிப்பதைப் பார்க்கும் போது பெரிய பரிதாபமாக இருக்கிறது. மனித அநீதிக்கு எதிராக உலக மக்கள் ஒருமைப்பட்டு செயற்படுவதையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன் என்று தெரிவித்தார்.

இதன்போது காமினி ஜயவீர நன்றியுரை நிகழ்த்துகையில்;

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பலஸ்தீனம் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. யுத்த இடம்பெறுவதற்கு முன்னர் நாங்கள் பலஸ்தீனம் தொடர்பான கண்காட்சியை நடத்துவதற்கு தீர்மானம் எடுத்திருந்தோம். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு சகல மக்களும் கலந்து கொண்டமை மிக முக்கியமான விடயம் ஆகும். உலகில் பலஸ்தீன மக்களுக்கு அசாதாரணமான சம்பங்கள் இடம்பெற்று வருகின்றன. விசேடமாக அங்கு சிறுவர் கொலைகள், பெண் கொலைகள், மக்கள் மிக அதிகமானளவு கொலை இடம்பெற்றுவதை நாம் அறிகின்றோம். உலகில் எந்தவொரு மனிதர்களும் இந்த கொடூர ஈனச் செயலை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. உலக நாட்டு மக்கள் என்ற வகையில் இந்த அநியாயம் நடைபெறுவதைத் தடுப்பதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும்.

உலகில் எந்த நாட்டிலாவது யுத்தம் நடந்தாலும் மனிதப்படுகொலைகள் மனிதனுக்கு மிகவும் பாதிப்பையே ஏற்படுத்தும். அந்த வகையில் பலஸ்தீனத்தில் யுத்தம் இடைநிறுத்தப்பட வேண்டும். மக்கள் கொன்றொழிக்கப்படுவது நிறைவுபெற வேண்டும். உலக நாடுகள் தலையிட்டு ஒவ்வொரு மக்களுடைய மனித உரிமைப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பலஸ்தீன மக்களுக்கு அநியாயம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக மக்கள் ஒன்றுபட்டு இந்த கோரிக்கையினை விடுக்கின்றோம்.

இதனையொட்டி கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். பௌத்த, முஸ்லிம் சமயத் தலைவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ சமய இறைபணியாளர்கள் , பாடசாலை மாணவர்கள். சிங்கள, தமிழ். முஸ்லிம் வர்த்தகப் பிரமுகர்கள். கல்வியியலாளர்கள், சிவில் அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் இந்த நிகழ்வினை வலுப்படுத்துவதற்காக வருகை தந்த அனைவருக்கும் எமது நன்றிகள். விசேடமாக நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு ஒரு நாள் ஒரு இலட்சம் விகிதம் 4 இலட்சம் அறவிடக் கூடிய திறந்தவெளி மண்டபத்தை இலவசமாக பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த இடத்தை தந்துதவிய மங்கல மல்லவ ஆராய்ச்சிக்கு நாங்கள் விசேடமாக நன்றியைத் தெரிவித்தக்கொள்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT