Thursday, December 12, 2024
Home » டயனா, சுஜித், ரோஹண தொடர்பான யோசனை நிறைவேற்றம்

டயனா, சுஜித், ரோஹண தொடர்பான யோசனை நிறைவேற்றம்

- 57 பேர் ஆதரவு; சுமந்திரன் மாத்திரம் எதிராக வாக்களிப்பு

by Rizwan Segu Mohideen
December 2, 2023 12:19 pm 0 comment

– தமது உறுப்பினர்கள் மீதான தீர்மானம் நியாயமற்று: ஐ.ம.ச.
– வாக்கெடுப்பை பகிஷ்கரித்த எதிர்க்கட்சி

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் டயனா கமகே எதிர்கட்சியில் உள்ள சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹண பண்டார ஆகிய ஐ.ம.ச. எம்.பிக்களை ஒரு மாதம் பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதை இடைநிறுத்தும், யோசனை இன்று (02) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் குறித்த யோசனையை இன்று (02) முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைய குறித்த யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவருக்கொருவர் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்க முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற சிறப்புரிமை குழு விசாரணைகளை முன்னெடுத்து குறித்த யோசனையை முன்வைத்திருந்தது.

குறித்த யோசனை ஒரு தலைப்பட்சமானது எனத் தெரிவித்து வாக்கெடுப்பை ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் புறக்கணித்து அவையை விட்டு வெளியேறியிருந்தனர்.

இதன்படி குறித்த வேளையில் பாராளுமன்றத்தில் இருந்த 61 பேரில் பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. மாத்திரம் வாக்களிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய 4 பேரில் பிரேம்நாத் சி தொலவத்த வாக்கெடுப்பை தவிர்த்ததோடு, 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தனர்.

அதற்கமைய குறித்த யோசனை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

தமது கட்சி உறுப்பினர் அஜித் மன்னப்பெரும செங்கோலை தொட்டதால் ஒரு மாத காலம் பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டதாகவும், பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்து தான் கேள்வி எழுப்பிய போது, முறையற்ற வகையில் நடந்து கொண்ட நபருக்கு 2 வாரங்கள் மாத்திரமே பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அந்த வகையில் தற்போது ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானமும் நியாயமற்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT