ஏடன் வளைகுடாவில் வர்த்தகக் கப்பல் ஒன்றை கடத்தும் முயற்சியை அமெரிக்க போர் கப்பல் ஒன்று முறியடித்துள்ளது.
சென்ட்ரல் பார்க் என்ற பெயர் கொண்ட பாஸ்போரிக் அமிலத்தை எடுத்துச் சென்ற இந்த சரக்குக் கப்பலில் இருந்து கிடைத்த உதவிக்கான அழைப்பை அடுத்தே அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். மேசன் போர் கப்பல் அங்கு விரைந்துள்ளது.
இதன்போது அந்த இடத்தில் இருந்து ஐந்து தாக்குதல்தாரிகள் விரைவு படகு ஒன்றின் உதவியோடு தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவர்களை பின்னால் துரத்தியதை அடுத்து சரணைடைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் யெமனில் ஹூத்திக்களின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து கப்பல் இருக்கும் பகுதியை நோக்கி இரு பலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த ஏவுகணைகள் கப்பலில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் வழுந்துள்ளன.
இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்தது தொடக்கம் மத்திய கிழக்கில் இடம்பெறும் வன்முறைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட சரக்குக் கப்பல் ஒன்றை கைப்பற்றியதோடு அந்தக் குழு இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.