அவுஸ்திரேலியா பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுதலை பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் “நியாயமற்ற வகையில்” செயற்பட்டிருப்பதாக சிட்னி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி சாரா ஹகேட் முன்னிலையில் வழக்கு விசாரணையின் செலவுகள் தொடர்பிலான விசாரணை நேற்று (24) இடம்பெற்றபோதே நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அரச தரப்பினால் தொடுக்கப்பட்ட அந்த வழக்கு தொடர்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் இருப்பதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி குணதிலக்கவின் வழக்கு செலவை அவருக்கு பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் உறுதி ஒன்றை வெளியிடும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
டேடிங் ஆப் ஒன்றின் மூலம் அறிமுகம் பெற்ற அந்த அவுஸ்திரேலிய பெண்ணின் மீது அவரது வீட்டில் வைத்து பாலிய தாக்குதல் நடத்தியதாக குணதிலக்கவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
சிட்னி பொலிஸார் அவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். வழக்கு விசாரணைக்குப் பின் குணதிலக்க கடந்த செப்டெம்பர் மாதம் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் இலங்கை திரும்பினார்.