Home » வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு

by Prashahini
November 20, 2023 3:12 pm 0 comment

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்று (20) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஏனைய பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலதிகமாக வரவழைக்கப்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று (19) உயிரிழந்துள்ளார்.

இளைஞனை பொலிஸார் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதால் தான் இளைஞன் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதை செய்தனர் என கூறும் உயிரிழந்த இளைஞனின் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்நிலையில் இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் ஊரவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பாரிய போராட்டம் ஒன்றினை பொலிஸ் நிலைய பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு ஏதுவாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x