வரவு – செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு, தானும் அரசாங்கத்திலுள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களை தாம் விளக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேர்தல் மட்டத்தில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.