Friday, May 3, 2024
Home » பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் சாத்தியம் குறைவு

பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் சாத்தியம் குறைவு

- நியூசிலாந்து கிட்டத்தட்ட உறுதி; தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

by gayan
November 11, 2023 1:42 pm 0 comment

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக தனது கடைசி ரவுன்ட் ரொபின் போட்டியில் இலகு வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்துக்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தபோதும் நிகர ஓட்ட விகிதம் அடிப்படையில் நியூசிலாந்தை பின்தள்ளுவதற்கு பெரும் சாதனை வெற்றி ஒன்றை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருப்பதோடு அதன் நிகர ஓட்ட விகிதம் 0.743 ஆக உள்ளது.

இந்நிலையில் 8 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அணி இன்று (11) தனது கடைசி ரவுன்ட் ரொபின் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 10 புள்ளிகளை பெற்று நியூசிலாந்தை சமன் செய்ய முடியும்.

என்றாலும் பாகிஸ்தான் அணியின் நிகர ஓட்ட விகிதம் 0.036 ஆக உள்ளது. எனவே, இங்கிலாந்தை சாதாரணமாக வென்றால் பாகிஸ்தானால் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற முடியாது.

இதன்படி பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும்.

அதாவது முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணியை 50 ஓட்டங்களுக்கு சுருட்டினால் பாகிஸ்தான் அணி அந்த வெற்றி இலக்கை இரண்டு ஓவர்களில் எட்ட வேண்டும் என்பதோடு 100 ஓட்டங்களுக்கு சுருட்டினால் அதனை மூன்று ஓவர்களில் எட்ட வேண்டும்.

இல்லாவிட்டால் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ஓட்டங்களுக்கு சுருட்ட வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இப்படி நிகழாத பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி மும்பையில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதோடு அதற்கு அடுத்த நாள் கொல்கத்தாவில் நடைபெறும் அரையிறுதியில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும்.

ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் வியாழக்கிழமை அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தும் என்பதோடு தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி முந்தைய தினத்திற்கு மும்பைக்கு மாற்றப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT