Home » வடக்கு, கிழக்கு வேலைவாய்ப்புகள் அந்தந்த மாவட்டத்தினருக்கு மட்டுமே

வடக்கு, கிழக்கு வேலைவாய்ப்புகள் அந்தந்த மாவட்டத்தினருக்கு மட்டுமே

அமைச்சர் டக்ளஸின் கருத்துகள் ஏற்பு

by gayan
November 11, 2023 6:10 am 0 comment

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீர்மானம்

அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்கப் பிரதிநிதிகளை நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கு, கிழக்கில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தினூடாக உள்வாங்கப்பட்டவர்கள் இருப்பதால், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில், இந்த விவகாரம் ஓரவஞ்சனையான தீர்மானமாக பாதிக்கப்படுகின்றவர்களால் பார்க்கப்படுமென்பதுடன், தேவையற்ற அரசியல் குழப்பங்களுக்கும் வழிவகுக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, எதிர்காலத்தில் அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மூலமே வெற்றிடங்களை நிரப்புவதற்கு முயற்சிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தென்னிலங்கையை சேர்ந்த ஏழு சிற்றூழியர்களை நியமிப்பதற்கான முன்னெடுப்புகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கமைய இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், கடற்றொழில் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இன்றைய கலந்துரையாடலில், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் போன்றவற்றில் நந்திக்கொடி ஏற்றி, தீபத்தால் ஔியேற்றுவதற்கும், தற்போதைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும திட்டத்துக்கு ‘ஆறுதல் திட்டம்’ எனும் மொழிபெயர்ப்பை தமிழ்மொழியில் பயன்படுத்தவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT