Sunday, May 19, 2024
Home » தென்னிலங்கை தனியார் நிறுவனங்களுக்கு யாழ். ஜனாதிபதி மாளிகையை ஒப்படைக்க கூடாது

தென்னிலங்கை தனியார் நிறுவனங்களுக்கு யாழ். ஜனாதிபதி மாளிகையை ஒப்படைக்க கூடாது

-அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்பு

by sachintha
October 17, 2023 7:04 am 0 comment

யாழ்ப்பாணம் – கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கு அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகை, அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்கள் மற்றும் மடங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை ஆதிசிவன் கோயில், சடையம்மா மடம், உச்சிப்பிள்ளையார் கோயில் போன்றவை இடிக்கப்பட்டே அப்பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டது.எனவே,இம்மாளிகையை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அல்லது இந்து சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். ஆதிசிவன் கோயில் மடங்கள் இருந்த இடத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதை விடுத்து, தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் இவற்றை ஒப்படைப்பதை ஏற்க முடியாது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில், பொதுமக்கள் போகமுடியாமல் கடற்படையின்

பொறுப்பில் இப்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மிக வேதனையான விடயம்.

இப்பகுதியில் இருந்த சித்தர்களின் சமாதிகள் பல உடைக்கப்பட்டுள்ளன. இது நாட்டுக்கு கெடுதியானவை. எனவே,இவற்றை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தென்னிலங்கை சார்ந்த வாணிப நிறுவனங்களுக்கு கையளிக்க கூடாது.

இது, திட்டமிட்ட அநியாய செயற்பாடு. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

காங்கேசன்துறை பலாலி வீதியில் சிவபூமி அறக்கட்டளைக்கு உரித்தான சுக்கிரவார திருகோணசத்திரத்தை, இராணுவ நலன்புரிச்சங்க தல்செவன ஹோட்டலின் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர். நூற்றியாறு பரப்பு கொண்ட சைவ சமய நிறுவனத்தின் மடத்தை அழித்து ஹோட்டல் பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இது நீதியற்ற செயல். உடனடியாக தல்செவன ஹோட்டலின் பயன்பாட்டில் உள்ள சமய நிறுவனத்தின் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT