Friday, May 17, 2024
Home » ஈஸ்டர் தாக்குதல் முக்கிய நபர் உட்பட அறுவர் தடுப்புக்காவலில்
அல்கைதாவுக்கு நிதியுதவி வழங்கிய கோடீஸ்வரர் அஹமத்துடன் தொடர்பு

ஈஸ்டர் தாக்குதல் முக்கிய நபர் உட்பட அறுவர் தடுப்புக்காவலில்

-சட்டமா அதிபரின் பணிப்புரை கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

by sachintha
October 17, 2023 6:55 am 0 comment

அல்கைதா பயங்கரவாத அமைப்புக்கு நிதி யுதவி வழங்கினார் என தெரிவிக்கப்படும் இலங்கை கோடீஸ்வரரான அஹமத் லுக்மான் தாலிப்புடன் தொடர்புகளை கொண்டிருந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில், முக்கிய சூத்திரதாரி உள்ளிட்ட சந்தேக நபர்கள் ஆறு பேருக்கு சட்டமா அதிபரின் பணிப்புரை கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் சந்தேக நபர்கள் அஹமட் லுக்மான் தாலிப்புடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக தாலிப்பின் தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளதாக சர்வதேச பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பிற்கு இணங்க விசாரணைகளை மேற்கொள்வதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

அதற்கு இணங்கவே மாஜிஸ்திரேட் இச்சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்கள் ஆறு பேரில் மூன்று பேரான 11, 12 மற்றும் 15ஆவது சந்தேக நபர்களை 72 மணித்தியாலங்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அந்தப் பிரிவு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனைத் தவிர ஏனைய சந்தேக நபர்களான 18, 19 மற்றும் 20ஆவது சந்தேக நபர்களிடம் விளக்கமறியலுக்குள் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டிருந்தது.

அல்கைதா பயங்கரவாத அமைப்புக்கு நிதி யுதவி வழங்கியமை தொடர்பில் அஹமட் லுக்மான் தாலிப் 2021 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டதுடன் அவர் தற்போது அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 700 தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் ஆராய்ந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள அறிக்கைக்கு இணங்க ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் அவருடன் தொடர்புகளை கொண்டிருந்தமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 7 (2) சரத்துக்களுக்கு இணங்க மேற்படி சந்தேக நபர்கள் ஆறு பேர் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT