Sunday, May 19, 2024
Home » பல்கலை மாணவர்கள் பகிடிவதை என்ற போர்வையில் கல்வியை சீரழிக்கக் கூடாது

பல்கலை மாணவர்கள் பகிடிவதை என்ற போர்வையில் கல்வியை சீரழிக்கக் கூடாது

-தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்

by sachintha
October 17, 2023 9:47 am 0 comment

 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

2021/2022ம் கல்வியாண்டிற்கு தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்திற்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்களுக்கான கல்வி ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (16) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை விடயத்தில் அரசு மிகுந்த இறுக்கமான தண்டனைகளை அறிமுகம் செய்துள்ளது.

பகிடிவதையினால் நாட்டில் உயர்கல்வியில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் கனிஷ்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி தொடர்பாக நல்ல அறிவுரைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க வேண்டுமே தவிர வெறுமனே பகிடிவதை என்ற போர்வையில் கல்வியை சீரழிக்கக் கூடாது.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதுகின்ற போதிலும் குறைவானவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவதாகவும் அவ்வாறு தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் அவர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஒரு பட்டதாரியை உருவாக்குவதற்கு அரசாங்கம் மில்லியன் கணக்கில் செலவிடுவதாகவும் மக்களின் வரிப்பணத்தில் கல்வியைத் தொடர்கின்ற மாணவர்கள் கல்வி என்ற இலக்கை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக தென்கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது. பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பல கனவுகளுடன் இங்கு வந்துள்ளனர். எனவே பல்கலைக்கழக வளங்களைப் பயன்படுத்தி நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெரும் பங்காற்ற வேண்டுமென்றார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT