Friday, May 3, 2024
Home » வைத்தியத்துறை வளர்ச்சியில் மனிதனின் உயிர்காக்க உதவும் மயக்க மருத்துவவியல்

வைத்தியத்துறை வளர்ச்சியில் மனிதனின் உயிர்காக்க உதவும் மயக்க மருத்துவவியல்

by damith
October 16, 2023 9:06 am 0 comment

மயக்கமருத்துவவியல் (Anesthesiology) என்பது மனிதனின் மருத்துவ வளர்ச்சியில் விலைமதிக்க முடியாத கண்டுபிடிப்பாகும். மனிதன் இத்துறையை கண்டறியத் தவறியிருந்தால் ஆளவிரிந்து கிடக்கும் அறுவைச்சிகிச்சைத்துறை அடையாளம் அற்றுப் போயிருக்கும்.

ஆண்டு தோறும் உலக மயக்கவியல் நாள் ஒக்டோபர் 16ஆம் திகதி நினைவுகூரப்படுகிறது. இதே தினத்தில்தான் இன்றைக்கு 177 ஆண்டுகளுக்கு முன்னர் போஸ்டன் நகரில் உள்ள பொதுவைத்தியசாலையில் வில்லியம்டி.ஜி.மார்டன் என்னும் பல்வைத்தியரால் இத்துறை உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஈதர் (Ether) எனும் மயக்க மருந்தைப் பயன்படுத்தி தாடை எலும்பில் இருந்து புற்றுநோய்க்கட்டி ஒன்றை வலியும் உணர்வும் இன்றி அகற்றிக் காட்டியதன் மூலம் அவர் இச்சாதனையைப் புரிந்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை மயக்கமருத்துவத்துறை பல்வேறு பரிணாம வளர்ச்சியைக் கண்டுவிட்டது. உடலை முழுமையாகவோ அல்லது தேவையான உடற்பாகத்தை மாத்திரம் தனியாகவோ உணர்விழக்கச் செய்து அறுவைச்சிகிச்சையை ஒருதுளியும் வலியின்றி நிறைவு செய்ய உதவுவது இத்துறைசார்ந்த வைத்தியர்களின் பிரதான பணியாகும்.

உதாரணமாக இலங்கையில் கூட நோயாளியின் மூளையில் உள்ள கட்டிகள் அவர் உணர்வோடு இருக்கும் போதே எந்தவித வலியும் இன்றி மண்டையோடு அகற்றப்பட்டு (Awake Craniotomy) அறுவைசிகிச்சை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். மயக்கமருத்துவர்கள் சேவை அறுவைச்சிகிச்சை கூடத்திற்குள் மாத்திரம் முற்றுப் பெறுவதில்லை. தீவிரசிகிச்சைபிரிவின் (ICU) பிரதான வகிபாகம், வலிசிகிச்சைகூடங்களை (Pain Clinic) நிறுவி உடல்வலிகளை குணப்படுத்துதல் என அவர்களின் பங்களிப்பு நீண்டு செல்கிறது. வைத்தியசாலையில் நோயாளியின் நோய்நிலைமை தீவிரமடையும்போது, இதயத்துடிப்பு நின்றுவிடும் போது (Cardiac Arrest), கர்ப்பிணி பிரசவவேதனையால் துடிக்கும்போது அவசரமாக அழைக்கப்படுவதும் மயக்கமருந்து மருத்துவர்களே.

மயக்கமருந்து மருத்துவர்களின் சேவை சுகாதாரத்துறை சார்ந்தவர்களால் நன்கறியப்பட்ட போதிலும் பொதுமக்களிடையே பாடப்படாத ராகமாகவே கடந்து செல்கிறது. அறுவைசிகிச்சைக்கு முன் உடலை பூரணமாக பரிசோதித்து தயார்படுத்துதல், பாதுகாப்பான அளவிற்குள் உடலை மயக்குதல், சுவாசம், இதயத்துடிப்பு போன்ற உடலின் முக்கிய செயற்பாடுகளை தங்கள் கண்காணிப்பில் வைத்திருத்தல், அறுவைச்சிகிச்சையின் இறுதியில் வலியற்ற மீள்உணர்வை ஏற்படுத்துதல், தேவை ஏற்படும் போது அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் மேலதிக சேவையினை வழங்குதல் என மயக்கமருத்துவர்களின் நாளாந்த செயற்பாடு பல்வேறு சவால்கள் மிக்கது. எனவேதான் மருத்துவத்தில் அதிக மனஅழுத்தத்தை தோற்றுவிக்கும் துறையாக (Stressful job) மயக்கமருத்துவம் கருதப்படுகிறது.

150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மயக்கமருந்து நிறுவனங்களின் உலககூட்டமைப்பின் WFSA (World Federation of Society of Anesthesiologists) நெறிப்படுத்தலில் பொதுவான நிகழ்ச்சிநிரலின் கூட்டாக இந்த உலக மயக்கமருந்து தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை புற்றுநோய் சிகிச்சையில் மயக்கமருத்துவத்தின் பங்களிப்பை மேம்படுத்துதல் (Anesthesia and Cancer Care) எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இம்மகத்தான பணியைப்புரியும் மயக்கமருந்து வைத்தியர்களை நீங்களும் வாழ்த்தலாம்.

Dr. A.M.அப்துஸ்சுகூர் விஷேட மயக்கமருத்துவவியல் நிபுணர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT