சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரி ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டு பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தக் கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வு ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு “அறியப்பட்ட சர்வதேச படைகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்கள்” மீது சிரியா குற்றம்சாட்டியுள்ளது.
எனினும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் கிளர்ச்சியாளர்கள் அல்லது ஜிஹாதிக்களைச் சேர்ந்த எந்தத் தரப்பும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஹோம்ஸ் நகரின் எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வட மேற்கு பகுதியில் இருந்தே இந்த ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து அரச எதிர்ப்பாளர்களின் கோட்டையான இத்லிப் மாகாணத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது அரச படை நடத்திய உக்கிற ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதல்களில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘வைட் ஹெல்மட்’ அமைப்பு தெரிவத்துள்ளது.
நண்பகலில் பட்டமளிப்பு முடிந்த விரைவில் ஹோம்ஸ் இராணுவ கல்லூரியை இலக்கு வைத்து வெடிபொருட்களை சுமந்த பல ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக சிரிய ஆயுதப் படைகளின் பொது கட்டளையகம் அந்நாட்டின் சனா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் கொல்லப்பட்டவர்களில் ஆறு பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்கள் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ஹசன் அல் கப்பாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவை அலங்கரிக்க உதவிய ஆடவர் ஒருவர் கூறியபோது, “விழா நிகழ்ச்சிக்குப் பின்னர் எல்லோரும் கீழே உள்ள முற்றவெளிக்கு சென்றபோது வெடிப்புகள் இடம்பெற்றன. அது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தரையில் உடல்கள் சிதறிக் கிடந்தன” என்றார்.
சிரியாவில் 2011 இல் இடம்பெற்ற அமைதியான ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களை ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு ஒடுக்க முயன்றதை அடுத்தே அங்கு உள்நாட்டு போர் வெடித்தது. இதில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.