Monday, May 6, 2024
Home » உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்

உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்

by gayan
October 5, 2023 12:16 pm 0 comment

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (05) இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பரபரப்பான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆடிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று முதல் போட்டியில் ஆடவுள்ளன.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணம் 46 நாட்கள் நடைபெற்று சம்பியன் அணியை தேர்வு செய்யும் இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கையுடன் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் உலகக் கிண்ணத்தில் இடம்பெற்றிருப்பதோடு இரு முறை உலக சம்பியனான மேற்கிந்திய தீவுகள் உலகக் கிண்ணத்தில் ஆடுவதற்கு தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கதாகும்.

ரவுன்ட் ரொபின் அடிப்படையில் நடைபெறும் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவுள்ளது. இதன்படி இந்த சுற்றில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறும். எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறும் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் முதல் சுற்றுப்போட்டிகள் முடிவடையும்.

இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். முதலாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகள் நவம்பர் 15 ஆம் திகதி மும்பையில் முதல் அறையிறுதியில் விளையாடவிருப்பதோடு இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது அரையிறுதியில் நவம்பர் 16 ஆம் திகதி கல்கத்தாவிலும் மோதவுள்ளன.

எவ்வாறாயினும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அது எந்த இடத்தில் தகுதி பெற்றாலும் அந்தப் போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படவிருப்பதோடு இந்தியா தகுதி பெற்றால் அந்தப் போட்டி மும்பையில் நடத்தப்படும். ஒருவேளை இந்த இரு அணிகளும் அரையிறுதியில் மோத வேண்டி ஏற்பட்டால் அந்தப் போட்டி கொல்கத்தாவில் நடத்தப்படும்.

போட்டிகள் நாட்டின் தெற்கில் சென்னை தொடக்கம் வடக்கில் தர்மசாலா வரையும் கிழக்கில் கொல்கத்தாவில் இருந்து மேற்கில் அஹமதாபாத் வரையும் அனைத்து இடங்களிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் மொத்த பரிசுத் தொகையாக 10 மில்லியன் டொலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 4 மில்லியன் டொலர்களும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிக்கு 2 மில்லியன் டொலர்களும் வழங்கப்படுவதோடு அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு 800,0000 டொலர்கள் வழங்கப்படும். குழு நிலையுடன் போட்டியை நிறைவு செய்யும் அணிகளுக்கு தலா 100,000 டொலர் பரிசும் குழுநிலையில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40,000 டொலர்களும் வழங்கப்படவுள்ளது.

போட்டியை நடத்தும் அணி என்ற வகையில் இந்தியாவும், நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் நோக்கில் இங்கிலாந்தும் வலுவான அணிகளாக களமிறங்குவதோடு அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் சவால் மிக்கவையாக உள்ளன.

உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக நடந்த இரண்டு பயிற்சி போட்டியிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி முழு பலத்துடன் களமிறங்காத போதும் ஆரம்ப சுற்று போட்டிகள் ரவுன்ட் ரொபின் சுற்றில் நடைபெறுவதால் போட்டிக்கு இடையே தம்மை பலப்படுத்திக் கொள்ள போதிய அவகாசம் உள்ளது.

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக் கிண்ணத்தில் அதிர்ச்சி கொடுக்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்குகின்றன. நெதர்லாந்து அணியின் ஆட்டம் சிறிய அளவு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அது ஒட்டுமொத்த போட்டி முடிவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமைய வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT