சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொலிஸ் பிரிவு உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை உள்ளடக்கிய இந்த விசேட குழுவை ஒருங்கிணைப்பதற்கான பணி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்டது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. சிறுவர்களையும், பெண்களையும் வியாபார நோக்கத்திற்காக யாசகம் செய்வதற்குப் பயன்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், சிறுவர்கள் யாசகத்துக்குப் பயன்படுத்தப்படுவது முற்றாகத் தடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் வலியுறுத்தினார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 41 மாநகரசபைகள் மற்றும் 24 மாநகரசபைகைளை உள்ளடக்கிய நகரப் பகுதிகளில் யாசகர்கள் குறித்து கணக்கெடுப்பொன்றை நடத்தியிருப்பதாக சமூக சேவைகள் திணைக்களம் குழுவில் தெரிவித்தது.
இந்தக் கணக்கெடுப்பின் தரவுகள் பதிவுசெய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை பதிவுசெய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் 3000 முதல் 4000 வரையிலான யாசகர்கள் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தரவுகள் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்ட பின்னர் யாசகத்துக்குப் பயன்படுத்தப்படும் பதினெட்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் பற்றிய
தகவல்களை வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கணக்கெடுப்பின் முழுமையான தரவுகளையும் குறித்த விசேட குழுவுக்கு வழங்குமாறும் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்கள், நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் கணக்கெடுப்பொன்றை நடத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றை விரைவில் பரிந்துரைக்குமாறும், அதனை நடைமுறைப்படுத்துவதற்குச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டியிருந்தால் அதில் தலையிடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுஜித் சஞ்சய பெரேரா, கௌரவ ராஜிகா விக்ரமசிங்ஹ, கௌரவ மஞ்சுலா திசாநாயக்க, கௌரவ ஜகத் குமார சுமித்திராரச்சி, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ திலக் ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.