புத்தளம் லெகூன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு மாத காலப்பகுதிக்குள் இலங்கையின் 25 மாவட்டங்களையும் ஊடறுத்து சுமார் 2194 கி.மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து சாதனை படைத்துள்ள லெகூன் அமைப்பின் உறுப்பினர் புத்தளம் தில்லையடி சதாமியாபுரத்தை சேர்ந்த என்.எல்.எம். நப்ஸானுக்கு புத்தளத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
புத்தளம் நிந்தனியில் பொதுமக்களால் இவர் வரவவேற்கப்பட்டு ஊர்வலமாக புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக அமைந்துள்ள மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
லெகூன் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.இல்ஹாம் தலைமையில் அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், புத்தளம் நகர சபை செயலாளர் கீத்தானி ப்ரீதிக்கா, ஐ.மீடியா பணிப்பாளர் கவிஞர் மரைக்கார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சாதனையை நிலைநாட்டிய நப்ஸானுக்கு அதிதிகள் விருது வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து நப்ஸான் அவர்கள் புத்தளம் மற்றும் தில்லையடி பிரதேசங்களுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இலங்கை பாதுகாப்பு துறையினர், சாதனை படைத்த நப்ஸானுக்கான பாதுகாப்பு விடயங்களை இலங்கை முழுவதிலும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சைக்கிள் பயணம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், முடியும் நாள் வரை சிறப்பாக பாதுகாப்பு வழங்கினர். இலங்கை பாதுகாப்பு துறையினருக்கு லெகூன் அமைப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.
(புத்தளம் தினகரன் நிருபர்)