மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது முக்கியமென்பதுடன், பொறுப்பை தவறவிட்டால், அது நாட்டில் பாரிய பாதிப்புகளுக்கு வழிவகுக்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை
இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவினர் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் கருத்துகளை முன்வைக்கும் போது, மிகக் கவனமாக அதனை மேற்கொள்வது அவசியமெனவும், அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெறும் போது, அன்றைய அமைச்சரவையில் நானும், தற்போது எதிர்க்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ள லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம் ஆகியோரும் அமைச்சர்களாக இருந்தோம். பின் ஆசனங்களில் உள்ளோரும் அப்போது எமது அரசாங்கத்தின் உறுப்பினர்களாகவே இருந்தனர்.
அவர்கள் இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் தெரிவித்த கருத்துகளை மீளப் பார்க்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சிலர் அன்று ஒருவாரும் இன்று ஒருவாரும் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
நான் சில விடயங்களை அன்றும் பேசவில்லை. இன்றும் பேசப் போவதில்லை. ஏனென்றால், அது நாட்டுக்கு பாதிப்பாக அமையலாம். குறிப்பாக, புலனாய்வுப் பிரிவினரின் செயற்பாடுகள் நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அவற்றை பேசுவதன் மூலம் நாட்டுக்கே மேலும் பாதிப்புகள் வரலாம்.
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகும். குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 41 குற்றவியல் குற்றங்களும் அதேபோன்று, 71 பாதிக்கப்பட்டவர்களது எதிர்ப்பு ஆட்சேபனை தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இந்த விவகாரம் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றுள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குகள் பேசப்படுகின்றன. அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சபையில் பேசுவதை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தெரிவிக்கவும் முடியும். அது மிக முக்கியமாகும். அது தொடர்பாக மேலும் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்கு அது தொடர்பாக தெரிவிக்க வேண்டியது முக்கியம்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக சபையில் இடம்பெறும் விவாதத்தை நோக்கும் போது, எமது நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றதென சிந்திக்க வேண்டியுள்ளது. நாம் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு செயற்படுவதா? மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் கருத்துகளை வெளியிட வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்