Saturday, November 2, 2024
Home » பாப்லோ நெருடா’ எனும் பெருங்கவி; சிலி நாட்டை சிலிர்க்க வைத்த மகாகவி

பாப்லோ நெருடா’ எனும் பெருங்கவி; சிலி நாட்டை சிலிர்க்க வைத்த மகாகவி

(உலக கவி பாப்லோ நெருடா மறைந்த செப்டம்பர் 23 நாள் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)

by gayan
September 23, 2023 4:34 pm 0 comment

பாப்லோ நெருடாவின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாவற்றிலும் வெளிவந்த சிறப்பினால், மாபெரும் கவிஞர் என லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெருடாவினைப் புகழ்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். இவர் கவிஞராக மட்டுமல்லாது, சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர். பாப்லோ நெருடா, (Pablo Neruda, ஜூலை 12, 1904 – செப்டம்பர் 23, 1973) என்ற புனைபெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ (Ricardo Eliecer Neftal Reyes Basualto), சிலி நாட்டில் பிறந்தவர்.

பாப்லோ நெருடாவின் முதல் கவிதைத் தொகுப்பு, 19ஆம் வயதில் வைகறைக் கதிர்கள் (Books of Twilights) என்ற பெயரில் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. நெருடாவின் ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்’ என்ற கவிதைத் தொகுப்பு ஸ்பானிய மொழியில் பெரும் கிளர்ச்சியையும், பரபரப்பையும் ஊட்டியது

இத்தொகுப்பு வெளியிடும் போது நெருடாவின் வயது இருபது. காதல் கவிதைகளில் அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை மேலும் பிரபலமாக்கியது.

பாப்லோ நெருடா எனும் புனைபெயர்:

1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரினை ஏற்றுக்கொண்டார்.

1904 ஆண்டு, ஜூலை 12 ஆம் திகதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெருடா பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே இவரை ஈன்ற தாய் மறைந்தார். பாப்லோ நெருடா முதல் முயற்சியாக தனது எட்டாம் அகவையில் எழுதிய கவிதை, தன் பெருந்தாயைப் பற்றிய‌தே. கவிதை எழுதுவதில் நாட்டமும் திறனும் கொண்டவர். சிறுவயதிலேயே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். 10 வயது முதலே பலரால் அறியப்படும் கவிஞராகப் புகழ்பெற்றார்.

ஆயினும் பாப்லோ நெருடாவின் தந்தை இவரது எழுத்தையும் இலக்கிய நாட்டத்தையும் எதிர்த்தார். ஆயினும் இவரது இலக்கிய ஆர்வம் தடைப்படவில்லை. தந்தையின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க ‘பாப்லோ நெருடா’ என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார்.

எரிமலையும், கனமழையும், சுரங்கங்களும் சூழ்ந்த சிலி நாட்டின் தென்பகுதியில் ஓர் ஏழை ரயில்வே கூலிக்கு மகனாகப் பிறந்து, துன்பத்தில் வளர்ந்து, உலக நாடுகள் பலவற்றுள் சிலி நாட்டுத் தூதராகப் (Consul) பதவி வகித்து, உலகப் பெருங்கவிஞருள் ஒருவராக வளர்ந்து, நோபல் பரிசு பெற்ற பெருங்கவிஞரே பாப்லோ நெருடா.

பாப்லோ நெருடா மார்க்சியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். சிலியில் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. இவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்தவர், பின்னர் ஆர்ஜென்டினாவுக்கு தப்பினார். 1971- இல் பாரீஸில் தூதராகப் பணியாற்றியபோது, இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

காதல், யதார்த்தம், அரசியல் என பல சிந்தனைகளை இவரது கவிதைகளை மையமாகக் கொண்டிருந்தன. கவிதைகளை பச்சை மையில்தான் எழுதுவார். ஆசை மற்றும் நம்பிக்கையின் சின்னம் பச்சை என்பது அவரது கருத்து.

கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் வரிகளைப் போலவே அமைந்துள்ள ‘பூமியின் சருமம் உலகெங்கும் ஒன்றுதான்’ (The skin of the earth is same everywhere)’ என்ற இவரது கவிதை வரிகள் பிரபலமானவை. ’20 ஆ-ம் நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் என்று புகழப்பட்ட பாப்லோ நெருடா 69 வயதில் (1973) மறைந்தார்.

1924- இலிருந்து 1934 வரை அவருடைய வாழ்க்கை ஒரே அலைக்கழிப்பாக இருந்தது. 1927-இல் பர்மாவிலும், 1928-இல் இலங்கையிலும், 1930-இல் ஜாவாடடேவியாவிலும், 1931-இல் சிங்கப்பூரிலும், 1933-இல் அர்ஜெண்டைனாவிலும் சிலிநாட்டுத் தூதுவராக (Consul)பணிபுரிந்தார். ஐந்தாண்டுகள் கிழக்காசிய நாடுகளில் வாழ்ந்தபோது தனிமை அவரை மிகவும் வருத்தியது.

தாய்மொழியான ஸ்பானிஷ் மொழியை யாரிடமும் பேச வாய்ப்பில்லாமல் தவித்தார். தூதரக வருமானம் தம்மைக் கெளரவமாக வாழப் போதியதாக இருக்கவில்லை. அதனால் சில அவமதிப்புக்களுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. தாம் அப்போதிருந்த நிலையை விளக்கி ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘தெருநாய்களின் துணையோடு வாழ்ந்தேன்’ என்று வருந்தி எழுதியிருக்கிறார்.

வியட்நாம் காடுகளில் சுற்றியலைந்ததைப் பற்றித் தமது பிற்காலக்கவிதையொன்றில் குறிப்பிடும் போது “என் வயதில் இருபதாண்டுகள் கூடிவிட்டன; சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்; என் மொழிக்குள் நான் சுருங்கிக் கொண்டேன்” என்று எழுதுகிறார்.

இலங்கையில் தூதராக பணி :

இலங்கையில் தூதராக இருந்தபோது, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். நேருவைக் கண்டு பேசவிரும்பி டில்லி சென்றார். நேரு முதலில் சந்திக்க மறுத்து விட்டார். இரண்டாம் முறை நேருவைக் கண்டு பேசினார். ஆனால் நேருவினால் அவரைக் கவர முடியவில்லை.

ஸ்பெயினில் வகித்து வந்த தூதர் பதவி பறிபோனதும் நெருடா பாரிசில் (1937_-39) சென்று தங்கினார். அப்போதுதான் அவருள்ளத்தில் அவரது சிறந்த படைப்பான ‘சிலிப் பெருங்காப்பியம்’ உருப்பெற்றது. அதுவே பத்தாண்டுகள் கழித்துப் பதினைந்து பாகங்களைக் கொண்ட ‘பொதுக் காண்டமாக’ வெளிவந்தது.

இப்பத்து ஆண்டுகளில் பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டு தீவிர அரசியல்வாதியானார். 1940- இலிருந்து 1943- வரை மூன்றாண்டுகள் மெக்சிகோவில் தூதராகப் பணிபுரிந்தார். அப்போது நாஜிகளால் தாக்கப்பட்டார். 1945- இல் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராகப் போட்டியிட்டு சிலி பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948- இல் சிலிநாட்டு ஜனாதிபதியாக இருந்த கான்சலஸ் விடெலா (Gonzaine Videia) பொதுவுடைமைக் கட்சியோடும் அக்கட்சி ஆட்சியிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனும் தமக்கிருந்த உறவை முறித்துக் கொண்டது. ஜனாதிபதியின் இச்செயலை நெருடா வெளிப்படையாகக் கண்டித்தார். இதனால் சிலி அரசாங்கம் இவரைச் சிறையிலடைக்க முயன்ற போது, நெருடா தலைமறைவானார். பொதுவுடைமைக் கட்சித் தோழர்களின் வீடுகளில் மறைந்திருந்து, கடைசியில் நாட்டைவிட்டு வெளியேறினார். அடுத்த நான்கு ஆண்டுகள் தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டார்.

அரசியல் நெருக்கடி மிக்க இப்போராட்டக் காலமே நெருடாவின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க காலகட்டம், இயற்கையையும் காதலையும் பாடிக்கொண்டிருந்த நெருடா அரசியற் கவிஞனாக உருப்பெற்றார். அவருடைய கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது போல், கவிதைச் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டது.

நெருடா தன் கவிதைகளைத் தூயவை, தூய்மையற்றவை (Pure and impure poetry) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார். உலக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு பாடப்படும் கவிதைகளே தூய்மையானவை என்பது நெருடாவின் கருத்து. மாணவப் பருவத்தில் காதலை மையப்படுத்தித் தாம் எழுதிய முதல் இரண்டு கவிதைத் தொகுப்பையும் தூய்மையற்றவை என்று அவரே ஒதுக்கி விடுகிறார்.

பாப்லோ நெருடா இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத் தன் கல்லறைப்பாட்டை ‘ஒளியின் ஜீவன்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராக, உலக மொழிகள் எல்லாவற்றிலும் பாப்லோ நெருடாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் கவிஞராக பாப்லோ நெருடா மிளிர்கின்றார்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x