Monday, May 20, 2024
Home » மின்னேற்றும் வாகனங்களின் இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

மின்னேற்றும் வாகனங்களின் இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

– SVAT முறைமையை இரத்துச் செய்யவும் அங்கீகாரம்

by Prashahini
September 12, 2023 3:55 pm 0 comment

– தேசிய மகளிர் ஆணைக்குழுவைத் தாபித்தல் தொடர்பான சட்டமூலம்
– அணு ஆயுத தடை பற்றிய ஒப்பந்தம்
– இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 12 முடிவுகள்

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டமூலத்திற்கான குழுநிலை விவாதத்தின் போது குறித்த சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரி முறைமை (SVAT) 2024.01.01 தொடக்கம் இரத்துச் செய்தல் உள்ளிட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெறுமதி சேர் வரியை மீளச் செலுத்தக்கூடிய வலுவான முறைமையொன்று இன்மையால் இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரி முறைமையை இரத்துச் செய்தால் தற்போது குறித்த முறைமையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு,குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு மோசமான காசுப்பாய்ச்சல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென குறித்த தரப்பினரால் முன்மொழிவுள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதனால்,வலுவான முறைமையொன்று உருவாக்கப்படும் வரைக்கும் இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரி முறைமை இரத்துச் செய்தல் படிபடிமுறையாக மேற்கொள்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய,சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரி முறைமையை இரத்துச் செய்தல் தொடர்பான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் திகதி 01.04.2025 என திருத்துவதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதற்காக நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. முதலீடுகளைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் இறக்குமதி வரியின்றி மீள்வலுவூட்டப்படும் (Recharge) செய்யக்கூடிய இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

“தற்போது காணப்படுகின்ற முதலீட்டுச் சபை கம்பனிகள் மீள்முதலீடுகளுக்காக முதலீட்டாளர்களை தக்கவைத்துக் கொள்ளல் மற்றும் விரிவாக்கம் செய்தல் வேலைத்திட்டம்” மற்றும் “முதலீட்டு சபையின் தகவல்கள் தொழிநுட்பத்தால் வலுவூட்டப்பட்ட சேவைக் கம்பனிகள் 100 வேலைத்திட்டம்” போன்ற வேலைத்திட்டங்களின் கீழ் முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக கீழ்க்காணும் தகைமை பெறுகின்ற அளவுகோல்களைப் பூர்த்தி செய்த கருத்திட்டங்களுக்கு,காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணத்துடன் கூடிய பெறுமதி 30,000 அமெரிக்க டொலர்களை விஞ்சாத மீள்வலுவூட்டக் கூடிய (Recharge) புதிய வாகனமொன்று சுங்கக் கட்டண விடுவிப்பில் இறக்குமதி செய்வதற்கு நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1. தற்போது காணப்படுகின்ற முதலீட்டுச் சபை கம்பனிகள் மீள்முதலீடுகளுக்காக முதலீட்டாளர்களை தக்கவைத்துக் கொள்ளல் மற்றும் விரிவாக்கம் செய்தல் வேலைத்திட்டம்

  • குறித்த நிறுவனங்கள் முதலீட்டு சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு 05 வருடங்களுக்கு குறையாததாக இருத்தல்
  • வர்த்தக விரிவாக்கத்திற்காக முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச தொகை 03 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருத்தல்

2. முன்மொழியப்படும் வர்த்தக விரிவாக்க வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 50  தொழில்வாய்ப்புக்கள் உருவாக்குதல்

  • முதலீட்டு சபையின் தகவல் தொழிநுட்பத்தால் வலுவூட்டப்பட்ட சேவைக் கம்பனிகள் 100 வேலைத்திட்டம்
  • குறித்த வர்த்தகத்தால் குறைந்தபட்சம் 50 புதிய உள்நாட்டு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டியதுடன், அவர்களில் 15 பேர் தொழிநுட்ப ரீதியான தகைமைகளைப் பெற்றுக் கொள்ளல்.
  • குறைந்தபட்ச முதலீடு 250,000 அமெரிக்க டொலர்களாக இருத்தல்.

3. பேரவாவி நீரின் தரப்பண்பை அதிகரிப்பதற்காக முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

ஜப்பானுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனமான Groepo Pte Ltd (GPL) நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைவாக,மைக்ரோ நனோ குமிழ் தொழில்நுட்பம்,கரிமநார் உயிர் இழையத் தொழிநுட்பம் மற்றும் சுற்றாடலுக்கு நேயமான என்சைம் பயன்படுத்தி பேரவாவி நீரின் தரப்பண்பை அதிகரிப்பதற்கான முன்னோடிக் கருத்திட்டமொன்று அரச நிறுவனங்கள் சில இணைந்து நடைமுறைப்படுத்துவதற்காக 2023.07.17 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கமைய கருத்திட்ட முதலீட்டாளர்கள் சமர்ப்பித்த மேலதிக தகவல்களைக் கருத்தில் கொண்டு எமது நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலுள்ள நீரின் தரப்பண்பு தொடர்பான நிபுணத்துவர்கள்,குறித்த அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய விசேட நிபுணத்துவ குழுவினரின்,இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களுக்கமைய, 05 ஆண்டுகளுக்கான உத்தேச முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும்,பின்னர் எட்டப்படும் பெறுபேறுகளின் அடிப்படையில் தொடர்ந்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்திற்கு எட்டுவதற்காகவும் நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அவர்களும்,நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி வீட்டுத் தொகுதி உள்ளடங்கிய காணித்துண்டை கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்.

நாரஹேன்பிட்டி,காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள 144 வீட்டு அலகுகளுடன் கூடிய அடுக்குமாடித் தொகுதி 0.2761 ஹெற்றயார் பரப்பளவு கொண்ட காணித்துண்டை கொமுப்ப பல்கலைக்கழகத்திற்கு ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அடுக்குமாடி வீட்டுத்தொகுதி உள்ளடங்கிய காணித்துண்டை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விடுதி வசதிகளுக்குப் பயன்படுத்துவதற்காக விடுவிப்பு பத்திரத்தின் மூலம்ஒப்படைப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சார்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி மின்கலச் சேமிப்பு வேலைத்திட்டத்திற்கான முதலீட்டு முன்மொழிவு

நாட்டில் துரித மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக 50 மெகாவாற்று அல்லது அதற்கு அதிகமான இயலளவு கொண்ட மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் துறையில் முதலீடுவதற்கு எதிர்பார்க்கின்ற முதலீட்டாளர்களின் விருப்புக் கோரல்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய,134 மெகாவாற்று மின்சாரத்தை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி மின்கலச் சேமிப்புத் தொகுதியுடன் கூடிய 700 மெகாவாற்று சூரிய மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான முன்மொழிவு யுனைட்டட் சோலர் எனேர்ஜி எஸ் எல் தனியார் கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1,727 மில்லியன் அமெரிக்க டொடலர்கள் மொத்த முதலீட்டுடன் கூடியதும்,மற்றும் 100% வீதம் வெளிநாட்டு முதலீடாக உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன்,அதில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்நாட்டு கருத்திட்டப் பகுதிக்குப் பயன்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக 13.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கடல்நீர் உட்புகுவதைத் தடுப்பதற்காக பூநகரிக் குளத்தைச் சுற்றி 03 அணைக்கட்டுக்கள் நிர்மாணிக்கப்பட்டு குறித்த குளத்தை புனரமைப்பதற்கும் கம்பனி முன்மொழிந்துள்ளது.

அதற்குப் பதிலாக குறித்த குளத்தின் ஆழமற்ற பகுதியான 1,080 ஏக்கர்களில் 700 மெகாவாற்று சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு 35 வருடகால குத்தகை ஒப்பந்த அடிப்படையில்,குறித்த கம்பனிக்கு வழங்குவதற்கு தற்போது வடக்கு மாகாண சபை,வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் போன்றன உடன்பாடு தெரிவித்துள்ளன.

அதற்கமைய,யுனைட்டட் சோலர் எனர்ஜி எஸ் எல் கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்வதற்கும்,குறித்த முன்மொழிவை மதிப்பீடு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. எதிர்வரும் 04 மாதங்களுக்கு ஒக்டேன் 92 Unl வகை பெற்றோல் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்.

2023.09.21 தொடக்கம் 2024.01.21 வரையான 04 மாதகாலத்திற்கு ஒக்டேன் 92 Unl வகை பெற்றோல் கப்பல்கள் 04 இனைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்களிடம் நீண்டகால ஒப்பந்தத்திற்காக விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 04 கம்பனிகள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த பெறுகையை சிங்கப்பூர் விடோல் ஏசியா கம்பனிக்கு வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வெளியிடப்பட்டுள்ள கட்டளையைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்.

தற்போது காணப்படுகின்ற இறக்குமதி வரிக்கட்டமைப்புக்கமைய முடிவுப் பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் அச்சு பூச்சுக்களை விடவும் உள்;ர் அச்சுப் பூச்சுக்களின் உற்பத்திகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஒருசில மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதிக வரி வகைப்படுத்தல்களுக்கு உட்படுவதால்,உள்நாட்டு அச்சு பூச்சு உற்பத்தியாளர்கள் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இந்நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2023.07.21 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கட்டளையைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் குவைத் அரசுக்கும் இடையிலான இருதரப்பு ஆலோசனைப் பொறிமுறையைத் தாபித்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் குவைத் அரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது இருநாடுகளுக்கிடையில் இருதரப்பு ஆலோசனைப் பொறிமுறையைத் தாபித்தல் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய,இருநாடுகளுக்கிடையில் அரசியல். பொருளாதார மற்றும் ஏனைய துறைகளில் நட்புரீதியான தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2023 ஆம் ஆண்டில் செப்டெம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடாத்தப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக இருதரப்பு ஆலோசனைப் பொறிமுறையைத் தாபித்தல் தொடர்பான புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. அணு ஆயுத தடை பற்றிய ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளல்.

அணு ஆயுத தடை பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக 2021 டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2023 செப்டெம்பர் மாதம் நியூயோர்க் நகரில் நடாத்தப்படவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நடாத்தப்படவுள்ள நிகழ்வில் இலங்கை அணு ஆயுத தடை பற்றிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பால்நிலைச் சமத்துவம் தொடர்பான சட்டமூலம்.

பால்நிலைச் சமத்துவம் தொடர்பாக இலங்கையில் பிற்போக்கான நிலைமையில் காணப்படுவதுடன்,பால்நிலைச் சமத்துவமின்மைகளைக் குறைப்பதற்காக மகளிர்,சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு படிமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கமைய,பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டும் நோக்கில் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2022.09.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய,சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தை பெண்கள்,சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதற்காக அமைச்சரவை கொள்கை ரீதியான உடன்பாட்டை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

11. தேசிய மகளிர் ஆணைக்குழுவைத் தாபித்தல் தொடர்பான சட்டமூலம்.

பெண்கள் உரிமைகள் மற்றும் பால்நிலைச் சமத்துவம் போன்ற விடயங்களுக்குத் தலைமைத்துவம் வகிப்பதற்கும்,மற்றும் பால்நிலைச் சமத்துவம் மற்றும் சமநியாயம் தொடர்பான பிரச்சினைகளில் தலையிடுவதற்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்திற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் மகளிர் ஆணைக்குழு எனும் பெயரிலான சுயாதீன ஆணைக்குழுவொன்றை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்குவதற்காக 2022.09.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தை பெண்கள்,சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதற்காக அமைச்சரவை கொள்கை ரீதியான உடன்பாட்டை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

12. இலத்திரனியல் வாகனங்கள் பொருத்துதலை ஊக்குவித்தல்.

பெரும்பாலான ஆசிய நாடுகள் இலத்திரனியல் வாகனங்கள், ப்ளக் இன் இரட்டைரக இலத்திரனியல் வாகனங்களைப் பொருத்துதல் மற்றும் தயாரிப்பதற்காக பூச்சிய (0%) இறக்குமதி வரி வீதம் போன்ற நேயம்மிக்க அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவ்வாறான கவர்ச்சிகரமான ஊக்குவிப்புக்கள் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கவர்ந்திழுக்கக் கூடியதுடன்,எதிர்காலத்தில் ஏற்றுமதி ஆற்றல்வளங்களை உருவாக்கக் முடிவதுடன்,சுற்றாடல் பாதுகாப்புப் பற்றிய உலகளாவிய அளவுகோல்களுக்கமைய செயலாற்றுவதற்கும் இயலுமாகும்.

அதற்கமைய,உள்நாட்டில் இலத்திரனியல் வாகனத் தயாரிப்புக்களை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை முதலீட்டுச் சபையுடன் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அல்லது புதிதாக ஒப்பந்தம் செய்கின்ற கம்பனிகளால் இலத்திரனியல் வாகனங்கள், ப்ளக் இன் இரட்டைரக இலத்திரனியல் வாகனங்களைப் பொருத்துதல் தொழிற்துறையில் குறைந்தபட்சம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மேற்கொள்கின்ற முதலீட்டாளர்களுக்கு 500Kw வலுக்கொண்ட தரப்படுத்தலுடன் கூடிய இலத்திரனியல் வாகனங்கள், ஈருருளிகள் மற்றும் 3000cc வரையான இயந்திரக் கொள்ளளவு கொண்ட ப்ளக்-இன் இரட்டைரக இலத்திரனியல் வாகனங்களைப் பொருத்துவதற்காக புதிய பகுதியளவிலான (Semi – knocked Down/SKD) தொகுதியை இறக்குமதி செய்யும் போது CIF பெறுதி சேர் பூச்சிய (0%) இறக்குமதி கட்டணத்தை விதிப்பதற்காக நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT