Monday, May 20, 2024
Home » 9/11 தாக்குதலுக்கு இன்றுடன் 22 வருடங்கள்!

9/11 தாக்குதலுக்கு இன்றுடன் 22 வருடங்கள்!

- மரணித்த 2,753 பேரில் மேலும் இருவர் சில தினங்களுக்கு முன் அடையாளம்

by Rizwan Segu Mohideen
September 11, 2023 11:16 am 0 comment

– 1,100 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக கருதப்படும், செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 22 வருடங்கள் நிறைவடைகிறது.

அமெரிக்காவின் இருண்ட நாளாக அறியப்படும் 2001 செப்டெம்பர் 11ஆம் திகதி, நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்டனில் உள்ள பென்டகன் மீது அல்கொய்தா அமைப்பு மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இத்தாக்குதல்களின் 22ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இவ்வேளையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு, இத்தாக்குதலில் உயிரிழந்த மேலும் இருவரை நியூயோர்க் நகர அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த ஆணும் பெண்ணும் அடையாளம் காணப்பட்ட 1648 மற்றும் 1649 ஆவது நபர்கள் என நியூயோர் மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தால் அடையாளம் காணப்பட்டதாக மேயர் அலுவலகத்தின் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களJ எச்சங்களின் மேம்பட்ட DNA சோதனை மூலம் இருவரும் அடையாளம் காணப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரின் பெயர்களை அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் வெளியிடவில்லை என்று மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட எச்சங்களின் டிஎன்ஏ சோதனை மூலம் ஆண் அடையாளம் காணப்பட்டதாகவும், 2001, 2006, 2013 ஆம் ஆண்டுகளில் மீட்கப்பட்ட எச்சங்களின் DNA சோதனை மூலம் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது வழக்கமான DNA அடையாள நுட்பங்களை விட அதிக உணர்திறன் மற்றும் விரைவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்க இராணுவத்தால் காணாமல் போன அமெரிக்க சேவையாளர்களின் எச்சங்களை அடையாளம் காண பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DNA தொழில்நுட்பத்தில் இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40% ஆனோர் அல்லது இறந்ததாகக் கருதப்படும் சுமார் 1100 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பயங்கரவாதத்தின் மிக மோசமான மற்றும் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படும் செப்டெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இப்பயங்கரவாத தாக்குதலை, அமெரிக்காவுக்கு சொந்தமான 4 விமானங்களை கடத்திச் சென்று, அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

கடத்தப்பட்ட 4 விமானங்களில் இரண்டு விமானங்கள், உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீது மோதச் செய்யப்பட்டு வீழ்த்தப்பட்டதோடு, மற்றைய விமானம் அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகன் மீது வீழ்த்தச் செய்யப்பட்டது.

பயணி ஒருவரின் இடையூறு காரணமாக நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொறுங்கியது.

இத்தாக்குதல்களில் விமானத்தில் இருந்த பயங்கரவாதிகளைத் தவிர 2,753 பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஆயிரக்கணக்கானோர் நீண்டகால உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். சுமார் 25,000 பேர் காயங்களுக்குள்ளாகியிருந்தனர்

இத்தாக்குதல்களால், 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக அமெரிக்கா மதிப்பிட்டிருந்தது.

இத்தாக்குதல்களை பொறுப்பேற்ற அல்கொய்தா மற்றும் அதன் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை தண்டிப்பதற்காக 2001இல் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்தது.

அங்கு தலிபான்களின் ஆட்சியை தகர்த்த அமெரிக்கா, அல்கொய்தா அமைப்பை விரட்டியடித்ததோடு, ஒசாமா பின்லேடனையும் 2011 இல் கொலை செய்திருந்தது.

ஆயினும் இது அமெரிக்காவின் அரசியல் விளையாட்டுகளில் ஒன்று என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் பல்லாயிரம் மக்களை பலி எடுத்த இந்த பயங்கரவாதத் தாக்குதலை அமெரிக்க மக்கள் வருடாந்தம் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT