Friday, May 3, 2024
Home » போலி A/L பரீட்சை பெறுபேற்றுடன் பணியாற்றிய ஆசிரியர் கைது

போலி A/L பரீட்சை பெறுபேற்றுடன் பணியாற்றிய ஆசிரியர் கைது

- 3 வருடங்களாக சம்பளமும் பெற்றுள்ளார்

by Rizwan Segu Mohideen
September 10, 2023 12:54 pm 0 comment

– பதவிநிலை உயர்வுக்கும் விண்ணப்பித்த போது அம்பலம்
– சந்தேகநபருக்கும் உதவியவருக்கும் செப்டெம்பர் 22 வரை விளக்கமறியல்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரையும், அவருக்கு போலி சான்றிதழை வழங்கியவரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் சேவை பதவிநிலை உயர்வு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் உறுதிப்படுத்தலுக்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட போதே அது போலியானது எனக் கண்டறியப்பட்டு மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய சில வருடங்களின் பின் மாகாண கல்வி அமைச்சினால் தொண்டர் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இற்கு உள்ளீர்க்கும் போது குறித்த நபருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

3 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக சம்பளம் பெற்று வந்த நிலையில் பதவிநிலை உயர்வுக்காக கல்வித் தகைமை ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை சான்றிதழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

அவற்றில் க.பொ.த. உயர்தர பரீட்சை சான்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டறியப்பட்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக்களத்துக்கு குறித்த நபர் மீது மோசடி குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிடப்பட்டது.

பொலிஸ் திணைக்களத்தினால் குறித்த நபர் மீதான விசாரணை யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பொலிஸ் பரிசோதகர் குணரோஜன் தலைமையிலான சிறப்பு குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி நபரை, கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அத்துடன், அவருக்கு உயர்தரப் பரீட்சையின் போலி சான்றிதழை தயாரித்து வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்று சனிக்கிழமை (09) யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT