Tuesday, May 21, 2024
Home » நபிகளார் மீது ஸலவாத் சொல்வோம்

நபிகளார் மீது ஸலவாத் சொல்வோம்

by sachintha
September 8, 2023 11:38 am 0 comment

 

‘அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது ‘ஸலவாத்’ எனும் நல்வாழ்த்துக்களை அனுப்பி வைக்கின்றார்கள். ‘ஈமான் கொண்டவர்களே..! நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள்’ (33:56) என்று அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கின்றது.

இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொண்டுள்ளவர்களின் அன்பும் பாசமும் அளவற்றது. அதனால் நபி (ஸல்) அவர்களை எப்படி கண்ணியப்படுத்த வேண்டும் என்பதை அல்குர்ஆனின் மேற்கூறிய வசனம் தெளிவுபடுத்துகிறது.

அதனால் நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறப்பட்டதும் ‘ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்’ என்று கூற வேண்டும். ‘அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீது நல்லாசியும் சாந்தியும் பொழிவானாக!’ என்பதே அதன் கருத்தாகும்.

நாம் அல்லாஹ்வை போற்றுகிறோம், துதிக்கிறோம், வணங்குகிறோம். அதேபோன்று அவனது தூதர் நபி (ஸல்) அவர்களையும் மதிக்கிறோம், பின்பற்றுகின்றோம், அவர்மீது நல்லாசியும் சாந்தியும் நிலவட்டுமாக… என இறைஞ்சுகின்றோம்.

அல்லாஹ்வின் கட்டளைகள், விருப்பங்கள் என்ன என்பதை மனித சமூகத்திற்கு எடுத்துரைப்பவராக நபி (ஸல்) அவர்கள் இருக்கின்றார்.

எனவே நாம் நன்றி செலுத்துவதற்கும், ஆழ்ந்த அன்பு செலுத்துவதற்கும் வாய்மையாக பின்பன்றுவதற்கும் நபி (ஸல்) அவர்கள் உரித்தானவர் ஆவார். நாம் நபி (ஸல்) அவர்களை முழுமையான மனிதராகவே பார்க்கிறோம். பின்பற்ற தகுந்த முன்மாதிரி அவர்களே என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே சமயம் அன்னாரும் படைக்கப்பட்ட மனிதர் என்ற வகையில் அல்லாஹ்வின் அருளுக்கு உரியவர் என்பதால் அன்னாரின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் ‘ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்’ என்று கூறுகிறோம்.

நபி (ஸல்) அவர்களின் துஆக்களில் காணப்படும் கருத்தாழம் மிக்க சொற்களில் அன்னாரின் தூய வாழ்வை உணர முடிகின்றது. நிலையான மறுமை வாழ்வு வெற்றிகரமாக அமைய வழிகாட்டுவதுடன், தம்முடைய அனைத்து விருப்பங்களையும் விட அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் வேண்டி நிற்கின்றன. உலகமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அமைதியான இரவு நேரம்தான் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை நேரமாக இருந்துள்ளது. அந்த இரவின் அமைதியில் – தனிமையில் இதயம் உருக கண்கள் கசிய இருகரமேந்தி அன்னார் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பால் அழைப்புப் பணி செய்யும் போது, உற்றார் உறவினர்கள் கூட துன்புறுத்தினார்கள். அத்தகைய துயரமான நிலையிலும் கூட தனது பிரார்த்தனையில் யார் மீதும் பழி சுமத்தவில்லை, எவரையும் குற்றம் குறை சொல்லவும் இல்லை. எதிரிகளைக் கூட சபிக்கவில்லை. மாறாக அத்தகைய அனைவரும் அல்லாஹ்வின் கருணையைப் பெறவேண்டும். அவனது வெறுப்பிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்தார்கள்.

தொகுப்பு: முஹம்மத் தல்ஹா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT