Tuesday, May 21, 2024
Home » இஸ்லாம் வெறுக்கும் நயவஞ்சகம்

இஸ்லாம் வெறுக்கும் நயவஞ்சகம்

by sachintha
September 8, 2023 11:48 am 0 comment

இறைதூதர் (ஸல்) அவர்கள் தமது தூதினை மக்காவில் முன்வைத்தபோது அதை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் இருந்தார்கள். தூதினை மறுத்த இறைநிராகரிப்பாளர்களும் அங்கு காணப்பட்டார்கள். ஆனால் மதீனாவுக்கு வந்தபோது இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட முனாபிக்குகள் எனும் நயவஞ்சகர்களும் தோற்றம் பெற்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும் போது நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டுச் சலிப்படைந்திருந்த அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினர் அப்துல்லாஹ் பின் உபை இப்னு ஸலூல் தலைமையில் ஒன்றுபட்டிருந்தனர். இந்நிலையில் மதீனாவின் தலைவராகும் ஆசையில் அவன் இருந்தான். இந்த வேளையில் நபிகளார் மதீனாவில் நுழைந்ததும் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தவர்களில் பெரும்பாலானவர்கள் நபி(ஸல்) அவர்களின் தூதை ஏற்று இஸ்லாத்தைத் தழுவினார்கள். அப்துல்லாஹ் பின் ஸலூலுடன் சொற்ப தொகையினரே எஞ்சினார்கள். அவனின் தலைமைத்துவக் கனவு தவிடுபொடியானது.

இருந்தும் தலைமைத்துவ ஆசை அவனை விட்டுவைக்கவில்லை. எல்லோரையும் போன்று அவனும் இஸ்லாத்தை ஏற்றான். முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு தனது தலைமைத்துவக் கனவை நிறைவேற்றிக் கொள்வதே அவனது தேவையாக இருந்தது. அவனது எண்ணங்களை அல்லாஹுத்தஆலா சூறா முனாபிக்கூன் மூலம் நபியவர்களுக்குத் தெரியப்படுத்தினான்.

‘(நபியே…!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான். (முனாபிக்கூன்:01)

அப்துல்லாஹ் பின் ஸலூல் தன்னிடமிருந்த தலைமைத்துவ ஆசைக்குத் தீனி போடும் வகையில் மக்கத்து முஹாஜிர்களுக்கும் மதீனத்து அன்ஸார்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயற்சித்தான். நாங்கள் அல் மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள். (63:8) என்று அந்தச் சம்பவத்தை அல்குர்ஆனிலே எடுத்துக் கூறி அவன் நயவஞ்சகன் என்றவாறாக அல்லாஹுத்தஆலாவே பிரகடனப்படுத்தி விட்டான். பின்னர் இவன் முனாபிக்குகளின் தலைவனாக இஸ்லாமிய வரலாற்றிலே அறியப்பட்டான்.

இவனுடைய உறவுகள், இவனிடம் தேவையுடையவர்கள் எனப்பலரும் இவனைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். இவர்களுடைய எண்ணிக்கை தெளிவாக வரையறுக்கப்படவில்லை. என்றாலும் உஹதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் முன்னூறு பேரளவில் காணப்பட்டார்கள். உஹதில் கலந்து கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்காக இவர்களது எண்ணிக்கை மிகைத்திருந்தமையே நபிகளாரே நேரடியாகக் கலந்து கொண்ட போதும் இந்த யுத்தம் ஆரம்ப கட்டத்தில் தோல்வியைத் தழுவுவதற்குக் காரணமாக அமைந்தது.

சமகால சமூகத்திலும் பல தோல்விகள் சம்பவிப்பதற்கு இவ்வாறானவர்கள் மிகைத்திருப்பதும் காரணமாகலாம். தமது தலைமைத்துவப் பதவி ஆசைக்காக சமூகத்தைக் கூறுபோடுகின்ற முனாபிக்குகள் இன்றும் காணப்படவே செய்கின்றனர். சிறு சிறு பிரச்சினைகளையும் மார்க்கத்தில் தீர்க்கப்படாமலேயே இருக்கின்ற பிணக்குகளையும் வைத்து சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி தமக்கென்றொரு ஆதரவு வட்டத்தைத் தோற்றுவித்துக்கொள்ள முயற்சிப்பவர்களும் உள்ளனர். செல்வாக்கு உள்ளவர்களதும் அதிகாரமுள்ளவர்களதும் அரவணைப்பைப் பெறுவதற்காக சமூகத்துக்குள்ளால் பிரிவுகளைத் தோற்றுவிக்கக்கூடியவர்களும் சமூகத்துக்கு உள்ளேயும் சமூக நிறுவனங்களிலும் ஊர்களிலும் காணப்படவே செய்கின்றனர்.

சமூகத்தின் மேல்தட்டில் மட்டுமன்றி சமூகத்தின் அடிமட்டத்திலும் இவ்வாறானவர்கள் அதிகரித்து வருவது சமூகத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கி விடலாம். முனாபிக்குகளை அடையாளம் காணும் வகையில் நபி (ஸல்) அவர்கள் சில விடயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

அவர் பேசினால் பொய் பேசுவார். வாக்களித்தால் மாறு செய்வார். நம்பினால் மோசடி செய்வார் (நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொள்வார்). இந்தப் பண்புகள் உள்ளவர்கள் முனாபிக்குகளின் அடையாளத்தைக் கொண்டிருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நபிமொழி)

சமகால சமூகத்திலும் இவ்வாறானவர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது. கட்டடம் கட்டும் தொழிலாளர்கள், தையற்காரர்கள், வியாபாரிகள் என நாம் தினமும் சந்திக்கின்றவர்களிலும் இவ்வாறான பண்புகளை எம்மால் காண முடிகிறது. உதாரணமாக குறித்த தினத்தில் வேலைக்கு வருவதாகவும், குறித்த வேலையை குறித்த நேரத்தில் செய்து தருவதாகவும் அவர்கள் அளிக்கின்ற வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவதில்லை. அதனை மறைப்பதற்காக பொய்க்கு மேல் பொய் சொல்வார்கள். சாதாரண மனிதனிடம் காணப்படுகின்ற முனாபிக்குகளுடைய அடையாளங்களை, பதவி மோகத்தாலும் தலைமைத்துவ ஆசையாலும் உந்தப்படுபவர்களிலும் அவதானிக்க முடியும்.

ஒரு தடவை நபி (ஸல்) கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். ‘யாரிடம் நான்கு பண்புகள் இருக்கின்றனவோ அவர் வடிகட்டிய முனாபிக்காவார். யாரிடம் இவற்றில் ஒன்றேனும் காணப்படுகிறதோ அவர் அதனை விட்டுவிடும் வரை முனாபிக்கின் பண்பு கொண்டவராகக் காணப்படுவார். நம்பிக்கை வைத்தால் நம்பிக்கைக்கு மோசடி செய்வார். பேசினால் பொய் பேசுவார். வாக்குறுதி அளித்தால் அதற்கு மாறு செய்வார். சர்ச்சைகளில் ஈடுபட்டால் பொய்யைக் கூறி உண்மையை மறைத்து விடுவார். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

முனாபிக்குகள் என்பவர்கள் முஸ்லிம்கள் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு மாற்றமாகச் செயற்படுபவர்கள். இவர்கள் இஸ்லாத்தை மறுப்பவர்கள் போன்று தெளிவாக அடையாளம் காட்டக் கூடியவர்கள் அல்லர். முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் இவர்கள் மறைந்திருப்பார்கள். மறைந்திருந்து கொண்டு தமது மோசமான செயற்பாடுகளால் சமூகத்தைக் கருவறுப்பார்கள்.

‘இவர்களைப் பொருத்தவரை இறைமறுப்பாளர்களை விட மோசமான நரகம் இவர்களுக்குத் தயார் செய்து வைத்திருப்பதாக அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். ‘நிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அங்கு அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் காணமாட்டீர்கள். (அல் குர்ஆன்- நிஸா 145).

அல்லாஹுத்தஆலாவின் கடும் கோபத்துக்கு உள்ளான நயவஞ்சகர்களாக மாறுவதிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதோடு கூட இருந்து குழி பறிக்கும் இந்த நயவஞ்சகர்களிடமிருந்தும் எம்மைக் காத்துக் கொள்வதிலும் நாங்கள் அதிக கவனம் செலுத்துவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT