Wednesday, May 15, 2024
Home » RAMIS உடன் போக்குவரத்து மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களங்களை இணைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வு

RAMIS உடன் போக்குவரத்து மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களங்களை இணைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வு

- வாகன பதிவு, அடையாள அட்டை தொடர்பான பல்வேறு சவால்கள் பற்றி கவனம்

by Rizwan Segu Mohideen
September 8, 2023 5:18 pm 0 comment

ரமிஸ் (RAMIS) கட்டமைப்புடன் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் என்பவற்றை தொடர்புபடுத்துவதன் முன்னேற்றம் பற்றி தேசிய பொருளாதாரம், பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய பொருளாதாரம், பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கருத்திற்கொள்ளப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும் ரமிஸ் (RAMIS) தரவுக் கட்டமைப்புடன் மோட்டார் வாகனப் போக்குவாரத்துத் திணைக்களம் மற்றும் காணிப் பதிவுத் திணைக்களம் என்பவற்றுக்குக் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடி அந்த விடயங்களைத் துரிதப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இந்நாட்டில் அதிகளவான சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இது தொடர்பில் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திடம் எவ்வித தகவலும் இல்லை எனவும் மோட்டார் வாகனப் போக்குவாரத்துத் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அத்துடன், வாகன உரிமையாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் திணைக்களத்திடம் இருக்கவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, இந்த அனைத்துத் தகவல்களும் RAMIS கட்டமைப்புடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும் என என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தை RAMIS கட்டமைப்புடன் தொடர்புபடுத்தும் நடவடிக்கைகளை ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்ய முடியும் என அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். அத்துடன், புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களின் உரிமையாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பெறுவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும், பதிவாளர் நாயகம் திணைக்களத்தை RAMIS கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்நாட்டின் அதிக பெறுமதிவாய்ந்த காணிகள் விற்பனை இடம்பெறுவதாகவும், இது தொடர்பான தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்திடம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார். அத்துடன், காணி உரிமையாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது குழு வினவியது. காணி உரிமையாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட தகவல்களைப் பெறுவது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கொன்று உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த தகவல்களைப் பெறுவது தொடர்பில் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டில்லை என்றும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், பதிவாளர் நாயகம் திணைக்களத்தை RAMIS கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவதை துரிதப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தல் வழங்கியது.

அத்துடன், அரச பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டறிக்கை, இலங்கை சுற்றுலா அதிகார சபையின் 2020 ஆம் ஆண்டறிக்கை, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டறிக்கை மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் 2021 ஆம் ஆண்டறிக்கை என்பன கருத்திற்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டன.

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திசாநாயக்க, இரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷண ராஜகருணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT